ஆரோக்கியத்தை அள்ளித் தரும் பெரிய பாளையத்து அம்மன்

  17
   பெரிய பாளையம்

  பாளையம் என்றால் படை வீடு என்று பொருள். பெரிய பாளையம் என்றால் பெரிய படை வீட்டை உடையவள்.

  பாளையம் என்றால் படை வீடு என்று பொருள். பெரிய பாளையம் என்றால் பெரிய படை வீட்டை உடையவள்.
  தேவகிக்கும், வசுதேவருக்கும் பிறந்த எட்டாவது குழந்தை கண்ணன் கோகுலத்தில் கொண்டு விடப்பட்டதும் யசோதைக்குப் பிறந்த பெண் குழந்தை வசுதேவரிடமும் சேர்க்கப்பட்டதும் நாம் அனைவரும் அறிந்ததே.

  கிருஷ்ணனுக்கு பதிலாக வந்த அந்த பெண் குழந்தையை, தன்னைக் கொல்ல வந்த குழந்தை என்று கருதி கம்சன் கொல்ல முற்பட்ட போது, அந்த தெய்வக் குழந்தை கம்சனின் கைகளிலிருந்து விடுபட்டு, காளியாகி வானுயர்ந்து ‘உன்னை அழிக்க வந்த பேராற்றல் மிக்கவன் கோகுலத்தில் வளரத் தொடங்கி விட்டான்’ என்றுச் அசரீரியாகச் சொல்லி ஆகாயமார்க்கமாக இங்கு வந்து சக்கரம், கத்தி, சங்கு, அமுத கலசம், கபாலம் இவற்றை கைகளில்  ஏந்தி அற்புத கோலத்தில் நம்மைக் காக்க  அமர்ந்தவளே அன்னை பவானி. விஷ்ணு துர்க்கை அப்படி ஏந்தியிருக்கிற கபாலத்தில் கலையரசி, மலையரசி, அலையரசி மூவரும் இருப்பதாக் ஐதீகம்.

  இந்த தலத்தில் கருணா சக்தி, கவி சக்தி, கோல சக்தி, வேத சக்தி, ஞான சக்தி ,பஞ்ச சக்தி, அருள் சக்தி என அனைத்து விதமான சப்த சக்திகளையும் தன்னுள் கொண்டவளாக அருள் பாலிக்கிறாள் பவானி. செல்லமாக பெரிய பாளையத்து அம்மன்.

  தீராத நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் நலம்  சரியானவுடன் தங்களது பிரார்த்தனைகளுக்கு ஏற்ப மனமுருகி வேப்பிலை ஆடை அணிந்து கோவிலை வலம் வருதல், பொங்கல் படையல் இடுதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், திருமண நாளில்  கட்டிய தாலியை அம்மனுக்குக் காணிக்கையாக செலுத்துதல், திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் திருமணம் கைகூடியதும் கரகம் எடுத்தல், ஈரத்துணியுடன் அடி தண்டம் தேங்காயை உருட்டுதல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் மாவிளக்கு எடுத்தல், முடிகாணிக்கை செலுத்துதல், சந்தான வரம் வேண்டுபவர்கள் தொட்டில் பிள்ளை கட்டுதல், குழந்தை பிறந்த பின்பு துலாபாரம் செலுத்துதல் என்று சகல விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும் பரிகாரங்களும் தினசரி நடந்த வண்ணம் உள்ளன.

  கம்சனுக்கு காளியாய் தோன்றிய மகாசக்தி தம் பக்தர்களுக்கு கருணைக் கடலாய் , மழை மேகமாய் வரங்களை அள்ளித் தருகிறாள்.

  அம்பிகையை கண்குளிர தரிசனம் செய்து நம் பிரார்த்தனைகள் நிறைவேற சங்கல்பம் செய்து வெளியில் வரும் போது மஞ்சளும், குங்குமமும், வேப்பிலையும் கலந்த தீர்த்தம் நமக்கு தரப்படும் வேளையில் நம் தீராத  வியாதிகளும், பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்ற உள்ளுணர்வும், மனநிறைவும் ஏற்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.