ஆட்சி பறிபோய் 6 ஆண்டுகள் கழிந்த பிறகும் இன்னும் எங்களில் சிலர் அமைச்சர்கள் போல் நடக்கின்றனர்….. சொந்த கட்சியினரை தாக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர்

  0
  6
  காங்கிரஸ்

  டெல்லியில் ஆட்சி பறிபோய் 6 ஆண்டுகள் கழிந்த பிறகும் இன்னும் எங்களில் சிலர் அமைச்சர்கள் போல் நடந்து கொள்கின்றனர் என டெல்லி தேர்தல் தோல்வி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

  டெல்லி சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி ஆட்சியை தக்கவைத்து கொண்டது. பா.ஜ.க. 8 தொகுதிகளை கைப்பற்றியது. அதேசமயம் இந்த தேர்தல் காங்கிரசுக்கு பெரும் தோல்வியாக அமைந்தது.

  காங்கிரஸ் தலைவர்கள்

  டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 66 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக 63 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. இந்த தோல்வி காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசின் தோல்வி தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

  ஜெய்ராம் ரமேஷ்

  காங்கிரஸ் தலைவர்கள் தங்களை புதுப்பித்து கொள்ள வேண்டும். இல்லையெனில் நாங்கள் பொருத்தமற்ற தன்மையை பார்த்து கொண்டிருக்கிறோம். நமது ஆணவம் போக வேண்டும். ஆட்சி பறிபோய் 6 ஆண்டுகள் கழிந்தபிறகும் சில நேரங்களில் நம்மில் சிலர் இன்னும் அமைச்சர்கள் போல் நடந்து கொள்கின்றனர். கட்சி தலைமையின் நோக்கம் மற்றும் பாணி மாற வேண்டும். இந்த தேர்தல் தோல்வி காங்கிரசுக்கு கொரேனாவைரஸ் போன்ற பேரழிவு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  காங்கிரஸ் புதிய அணுகுமுறைக்கு மாற வேண்டும் என அந்த கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் சொல்ல தொடங்கி விட்டனர்.