ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்தார் முகேஷ் அம்பானி – அலிபாபா குரூப் நிறுவனர் முதலிடம்

  0
  1
  Mukesh Ambani

  ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை முகேஷ் அம்பானி இழந்தார்.

  மும்பை: ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை முகேஷ் அம்பானி இழந்தார்.

  கொரோனா வைரஸ் உலக நாடுகளை புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் பீதி காரணமாக சர்வதேச பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக உலகளவில் பல்வேறு நிறுவனங்களின் பங்கு மதிப்பு பெருமளவில் வீழ்ச்சி கண்டிருக்கிறது. அதற்கு இந்திய பங்குச் சந்தைகளும் விதிவிலக்கா என்ன? இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை ஒரே நாளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,942 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. அதனால் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் சரிவடைந்தது. இதன் எதிரொலியாக முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் வீழ்ச்சி கண்டது.

  ttn

  இதனால் ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானி அந்த அந்தஸ்தை இழந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அலிபாபா குரூப் ஹோல்டிங் நிறுவனர் ஜேக் மா மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 4,450 கோடி டாலராக (சுமார் ரூ.3.25 லட்சம் கோடி) உள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பைக் காட்டிலும் இது 260 கோடி டாலர் அதிகமாகும். பங்குச் சந்தைகளின் சரிவால் கடந்த திங்கள்கிழமை மட்டும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 580 கோடி டாலர் சரிந்தது.