அரசு வங்கின்னா இளக்காரமா போச்சு! கடனை திரும்ப செலுத்தாவர்கள் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரிப்பு!

  0
  3
  கடன்

  சாமானியர்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்க ஆயிரம் விதிமுறைகளை சொல்வார்கள். ஆனால் பணக்காரர்கள் கேட்ட உடனேயே கடன் கிடைத்து விடும்

  கடந்த 5 ஆண்டுகளில் தேசிய வங்கிகளில் கடனை வாங்கி விட்டு நல்ல வசதி இருந்தும் வேண்டும் என்றே திரும்ப செலுத்தாவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

  சாமானியர்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்க ஆயிரம் விதிமுறைகளை சொல்வார்கள். ஆனால் பணக்காரர்கள் கேட்ட உடனேயே கடன் கிடைத்து விடும். ஆனால் அவர்களில் விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற பெரும் பணக்காரர்கள் வாங்கிய கடனை கட்டாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடி விடுகின்றனர். அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வந்து கடனை வசூலிக்க மத்திய அரசு படாதபாடு பட்டு வருகிறது.

  வங்கிகளில் வாங்கிய கடனை பெரும்பாலானவர்கள் முறையாக செலுத்தி விடுகின்றனர். அதேசமயம் நெருக்கடி நிலையால் கடனை சரியாக கட்ட முடியாமல் சிலரால்  போய் விடுகிறது. இதை யாராலும் தவிர்க்க முடியாது. ஆனால் நல்ல வசதி வாய்ப்புகள் இருந்தும் வேண்டும் என்றே கடனை திரும்ப செலுத்தாமல் பலர் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு, வேண்டும் என்றே கடனை திரும்ப செலுத்தாவர்கள் என்று வங்கிகள் அறிவித்து வருகின்றன.

  அந்த வகையில், கடந்த 5 ஆண்டுகளில் அரசு வங்கிகளில் வேண்டும் என்றே கடனை திரும்ப செலுத்தாவர்கள் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் இது தொடர்பாக கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். 

  அதில், 2014-15ம் நிதியாண்டு இறுதி நிலவரப்படி,  அரசு வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த நல்ல வசதி வாய்ப்புகள் இருந்தாலும்  வேண்டும் என்றே திரும்ப செலுத்தாவர்கள் எண்ணிக்கை 5,349ஆக இருந்தது. இது 2018-19ம் நிதியாண்டு இறுதியில் 8,582ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வசதி வாய்ப்புகள் இருந்தும் வேண்டும் என்று கடனை திரும்ப செலுத்தாத நிறுவனங்கள் அல்லது தனிநபர்களிடமிருந்து ரூ.7,654  கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.