அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி போன சிவ சேனாவின் பரிதாப நிலை

  0
  5
  உத்தவ் தாக்கரே

  மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்காக, தேசியவாத காங்கிரசின் நிபந்தனை ஏற்று, இருந்த ஒரு மத்திய அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்த சிவ சேனாவால் இறுதியில் ஆட்சி அமைக்க முடியாமல் போய் விட்டது.

  மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எதிர்பார்த்த மாதிரி பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி பெரும்பான்மை இடங்களை பிடித்தது. ஆனால் அதன் பிறகு மக்கள் எதிர்பார்த்தமாதிரி எதுவும் நடக்கவில்லை. முதல்வர் பதவியை சமகாலம் விட்டு கொடுத்தால் பா.ஜ.க. ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்போம் என  சிவ சேனா கட் அண்டு ரைட்டாக பேசியது. இதனால் குறிப்பிட்ட காலத்துக்குள் பா.ஜ.க.வால் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியவில்லை.

  பா.ஜ.க.

  இருப்பினும், தேர்தலில் அதிக இடங்களை வென்ற (105) கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க வருமாறு அம்மாநில கவர்னர் பகத் சிங்  கோஷ்யரி அழைப்பு விடுத்தார். ஆனால் தங்களுக்கு பெரும்பான்மை இல்லை பா.ஜ.க. பின்வாங்கியது. இதனையடுத்து அதிக இடங்களை வென்ற (56) 2வது பெரிய கட்சியான சிவ சேனாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். திங்கட்கிழமை (நேற்று) இரவுக்குள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிப்பதாக சிவ சேனா கவர்னரிடம் தெரிவித்தது.

  சிவ சேனா

  தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடம் சிவ சேனா ஆதரவு கோரியது. ஆதரவு அளிக்க தயார் ஆனால் மாநிலத்திலும், மத்தியிலும் பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்து கொள்ள வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் நிபந்தனை விதித்தது. இதனையடுத்து ஆட்சி அமைக்கும் கனவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் இருந்த ஒரு மத்திய அமைச்சர் பதவியையும் நேற்று சிவ சேனா உதறியது. சிவ சேனா எம்.பி.யும், மத்திய தொழில்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சருமான அரவிந்த் சவாந்த் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

  அரவிந்த் சாவந்த்

  மத்திய அமைச்சர் பதவியை துறந்து விட்டு, பா.ஜ.க.வுடான உறவை துண்டிக்க தயார் என்பதை தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு சிவ சேனா உணர்த்தியது. அதேசமயம் சிவ சேனாவுக்கு ஆதரவு அளிக்க தயார் ஆனால் இது குறித்து கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேச வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்தது. இதனால் நேற்று மாலைக்குள் அந்த கட்சிகளிடம் ஆதரவு கடிதத்தை சிவ சேனாவால் வாங்க முடியவில்லை. இருப்பினும், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை சிவ சேனா சந்தித்தது. அப்போது தங்களுக்கு 161 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகவும், மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவு கடிதம் அளிக்க சில நாட்கள் அவகாசம் வேண்டும் என கவர்னரிடம் சிவ சேனா கோரிக்கை விடுத்து.

  சரத் பவார்

  ஆனால் சிவ சேனாவின் கோரிக்கையை கவர்னர் பகத் சிங் ஏற்க மறுத்து விட்டார். மேலும், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச வருமாறு தேசியவாத காங்கிரசுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். 24 மணி நேரத்துக்குள் ஆட்சி அமைக்க விருப்பமா? முடியுமா? என்பது குறித்து பதில் அளிக்கும்படி தேசியவாத காங்கிரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் சிவ சேனாவின் ஆட்சி அமைக்கும் மற்றும் முதல்வர் பதவி கனவு தகர்ந்தது. பேசாமல் பா.ஜ.க. ஆதரவு அளித்து இருந்தால் துணை முதல்வர் பதவி மற்றும் கூடுதலாக மாநில அமைச்சர்கள் பதவி சிவ சேனாவுக்கு கிடைத்து இருக்கும். மேலும், மத்திய அமைச்சர் பதவியையும் இழந்து இருக்க வேண்டிய அவசியமும் இருந்து இருக்காது.