அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு – ஏ.ஐ.எம்.பி.எல்.பி.

  0
  4
  ஏ.ஐ.எம்.பி.எல்.பி. தலைவர்கள்

  அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய குறைந்தபட்சம் 3 வழக்காளிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏ.ஐ.எம்.பி.எல்.பி.) தகவல் தெரிவித்துள்ளது.

  பல ஆண்டுகளாக முடிவு தெரியாமல் இழுத்தடித்து வந்த அயோத்தி நில உரிமை வழக்கில் அண்மையில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய நிலத்தில் இந்துக்கள் ராமர் கோயில் கட்டி கொள்ளலாம் என்றும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பெரும்பான்மையான மக்கள் வரவேற்றனர். 

  அயோத்தி

  மேலும் உத்தர பிரதேசத்தின் சன்னி மத்திய வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று கொள்வதாகவும், அதனை எதிர்த்து சீராய்வு மனுதாக்கல் செய்ய மாட்டோம் என தெரிவித்தது. இந்நிலையில், அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 5 ஏக்கர் மாற்று இடத்தை பெற்று கொள்ள கூடாது என்றும், குறைந்தபட்சம் 3 வழக்காளிகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுதாக்கல் செய்ய சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  உச்ச நீதிமன்றம்

  இந்த கூட்டத்துக்கு உ.பி. சன்னி மத்திய வக்பு வாரியத்தின் தலைவர் ஜூபர் பாருக்கிக்கு அழைப்பு விடுத்தபோதும் அவர் அதில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டார். மேலும், சீராய்வு மனு தாக்கல் செய்வது இல்லை என்ற எங்களது முந்தைய நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என தெரிவித்தார். ஆக, சீராய்வு மனு தாக்கல் செய்வதில் முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், அவை ஒருமித்த கருத்து அடிப்படையில் சீராய்வு மனு தாக்கல் செய்வது சந்தேகம் என கூறப்படுகிறது.