அயோத்தி வழக்கால் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

  0
  3
  ரஞ்சன் கோகாய்

  அயோத்தி, சபரிமலை, ரபேல் உள்ளிட்ட முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு எழுத வேண்டியது உள்ளதால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை ரத்து செய்துள்ளார்.

  துருக்கியின் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் பொன் விழா நிகழ்ச்சி அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.ஏ. பாப்தே உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வதாக முன்பு ஒப்பு கொண்டு இருந்தனர். இதுதவிர, அரசு முறை பயணமாக  நியுயார்க், டொராண்டோ மற்றும் இந்தோனேஷியா மற்றும் பாலி ஆகிய நாடுகளுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் செல்வதாக முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது.

  உச்ச நீதிமன்றம்

  ஆனால் தற்போது தனது வெளிநாட்டு பயணங்களை திடீரென உச்ச நீதிபதி ரஞ்சன் கோகாய் ரத்து செய்து விட்டார். ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அதற்கு முன் அயோத்தி, ரபேல் ஒப்பந்தம், சபரிமலை அய்யப்பன் கோயில் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கி விட்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த வழக்குகளில் தீர்ப்பு எழுவதில் ரஞ்சன் கோகாய் மும்முரமாய் உள்ளார். இதில் கவனம் செலுத்தும் நோக்கில்தான் தனது வெளிநாட்டு பயணத்தை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ரத்து செய்து விட்டார்.

  அயோத்தி வழக்கு

  பல ஆண்டுகளாக சவ்வாக இழுத்து வந்த அயோத்தி வழக்கு விவகாரம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து விட்டது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நவம்பர் 4-17ம் தேதிகளில் அயோத்தி வழக்கில் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.