அமேசான், வால்மார்ட் நிறுவனங்களுடன் மோத தயாராகும் முகேஷ் அம்பானி….

  0
  3
  முகேஷ் அம்பானி

  ஆன்லைன் வர்த்தகத்தில் களம் இறங்க முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார். இ காமர்சில் (ஆன்லைன் வர்த்தகம்) கொடி கட்டி பறக்கும் அமேசான்,வால்மார்ட் நிறுவனங்களுடன் மோத அவர் தயாராகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

  நம் நாட்டில் ஆன்லைன் வர்த்தகம் வந்த புதுசில் பெரிய அளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கவில்லை. தகவல்தொழில் நுட்பத்தின் அசூர வளர்ச்சியால் ஆன்லைன் வர்த்தகம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி விட்டது. மேலும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அள்ளி வழங்கிய சலுகைகளும் வாடிக்கையாளர்களை ஆன்லைன் வர்த்தகத்தை நோக்கி திரும்ப செய்தது.

  அமேசான்

  தற்போது நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ஆன்லைன் வர்த்தகத்தை மேற்கொள்கின்றனர். அடுத்த 7 ஆண்டுகளில் இந்தியாவின் ஆன்லைன் வர்த்தக சந்தையின் மதிப்பு ரூ.14 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த துறையில்தான் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி களமிறங்க திட்டமிட்டுள்ளார்.

  வால்மார்ட்

  கடந்த 3 ஆண்டுகளுக்கு இந்திய தொலைத்தொடர்பு துறையில் தனது ஜியோ நிறுவனம் வாயிலாக காலடி எடுத்து வைத்தது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இலவச அழைப்பு, குறைந்த கட்டணத்தில் டேட்டா போன்ற சலுகையால் குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்தது. தற்போது நாட்டில் அதிக மொபைல் இணைப்புகளை கொண்ட முன்னணி நிறுவனமாக ஜியோ உருவெடுத்துள்ளது.

  ஜியோவை எப்படி அதிரடியாக களம் இறக்கினாரோ, அதனை காட்டிலும் படு அமர்களமாக ஆன்லைன் வர்த்தகத்தில் முகேஷ் அம்பானி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் தீபாவளி சமயத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் களம் இறங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் கிறிஸ்மஸ் பண்டிகை சமயத்தில் வர்த்தகம் களைகட்டுவது போல் இந்தியாவில் தீபாவளி சமயத்தில்தான் வர்த்தகம் படுஜோராக இருக்கும். எனவே தீபாவளி சமயத்தில் டிஜிட்டல் வர்த்தகத்தில் முகேஷ் அம்பானி களம் இறங்குவார் என தெரிகிறது.

  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

  அதேசமயம், அமேசான், வால்மார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு கடும் சவால் விடும் வகையில் அதிரடி திட்டங்களுடன் முகேஷ் அம்பானி களம் இறங்குவார் கூறப்படுகிறது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்  இது குறித்து கருத்து மறுத்து விட்டார். மேலும் நிறுவனத்தில் செயல்அதிகாரிகளும் இது தொடர்பாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. முகேஷ் அம்பானி தனது ஆன்லைன் வர்த்தக நுழைவை மிகவும் ரகசியமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.