அமலாக்கத்துறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையா வழக்கு

  0
  3
  விஜய் மல்லையா

  வெளிநாட்டுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, இந்தியாவில் தனது அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை எடுத்துள்ள முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

  பிரபல தொழிலதிபரும், சிறகொடிந்து கிடக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான விஜய் மல்லையா ஸ்டேட் வங்கி உள்ளிட்ட இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி இருந்தார். கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காகத்தான் வங்கிகளில் கடனை வாங்கி இருந்தார். கடனை வாங்கிய மல்லையா வங்கிகளில் அதனை திருப்பி செலுத்தவில்லை. 

  கிங்பிஷர் ஏர்லைன்ஸ்

  இதனையடுத்து வங்கிகள் கடனை திருப்பி கட்டும்படி, விஜய் மல்லையாவுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கின. ஆனாலும் மல்லையா கொஞ்சம் கூட அசரவில்லை. இதனையடுத்து வங்கிகள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க தொடங்கின. இதற்கு மேலும் இந்தியாவில் இருந்தால் சிறையில் களி திங்க வேண்டியது இருக்கும் என்று உஷாரான யாருக்கும் தெரியாமால் இங்கிலாந்துக்கு தப்பியோடி விட்டார்.

  அமலாக்கத்துறை

  லண்டனில் இருக்கும் மல்லையாவை நாடு கடத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்கிடையே அமலாக்கத்துறை இந்தியாவில் உள்ள மல்லையாவின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய முடிவு செய்தது. இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மல்லையா மனு தாக்கல் செய்தார். ஆனால், உயர் நீதிமன்றம் மல்லையா மனுவை நிராகரித்து விட்டது. இதனையடுத்து தனது சொத்துக்களை பறிமுதல் செய்யும் அமலாக்கத்துறையின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மனு தாக்கல் செய்துள்ளார்.

  உச்ச நீதிமன்றம் நாளை மல்லையாவின் மனுவை விசாரணைக்கு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.