அபிநந்தன் படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பாஜக எம்.எல்.ஏ.,தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

  0
  1
  அபிநந்தன்

  பாஜக எம்.எல்.ஏ., தனது ஃபேஸ்புக்கில் பக்கத்தில் பதிவிட்ட அபிநந்தன் புகைப்படத்தை நீக்க வேண்டும் என ஃபேஸ்புக் நிறுவனத்திடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது

  புதுதில்லி: பாஜக எம்.எல்.ஏ., தனது ஃபேஸ்புக்கில் பக்கத்தில் பதிவிட்ட அபிநந்தன் புகைப்படத்தை நீக்க வேண்டும் என ஃபேஸ்புக் நிறுவனத்திடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

  புல்வாமாவில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே வான்மோதல் நேரிட்ட போது, பாகிஸ்தானின் எப் 16 விமானத்தை சுட்டு வீழ்த்தியவர் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன். அவர் சென்ற விமானம் துரதிருஷ்டவசமாக பாகிஸ்தானின் தாக்குதலில் சிக்கியது. அபினந்தனும் பாகிஸ்தான் வசம் சிக்கினார். இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக 2 நாட்களில் இந்தியாவிற்கு திரும்பினார். 

  மத்திய அரசு எல்லை தாண்டி நடத்திய இந்த தாக்குதல் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டாலும், இச்சம்பவங்களை முன்வைத்து பாஜக அரசியல் செய்வது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பாஜக தலைவர் ஒருவர் தில்லியில் ராணுவ சீருடை அணிந்து வாக்கு சேகரித்ததை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

  அந்த வகையில், தில்லி பாஜக எம்எல்ஏ ஓம் பிரகாஷ் சர்மா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், மோடி, அமித்ஷா மற்றும் அபிநந்தன் ஆகியோரின் புகைப்படங்களை பதிவு செய்திருந்தார். மார்ச் 1-ம் தேதி இதனை பதிவிட்டுள்ள அவர், மோடியின் ராஜதந்திரத்தால் மிகவும் குறைந்த காலத்திலேயே அபிநந்தன் திரும்ப அழைத்து வரப்பட்டார் என அதில் குறிப்பிட்டிருந்தார்.

  omprakashsharma

  இதனிடையே, நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களுடைய நடவடிக்கைகள், புகைப்படங்களை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

  ஆனால், ஓம் பிரகாஷ் சர்மாவோ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்தை நீக்காமல் வைத்திருந்தார். இதையடுத்து, இதுகுறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல், அந்த படங்களை நீக்க வேண்டும் என ஃபேஸ்புக் நிறுவனத்திடமும் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

  இதுகுறித்து ஓம் பிரகாஷ் சர்மா கூறுகையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே நான் அதனை பதிவு செய்து விட்டேன். தேர்தல் ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது என எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.