அக்டோபர் 2 முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை- ரயில்வே அதிரடி முடிவு….

  0
  1
  ரயில்வே அமைச்சகம்

  அக்டோபர் 2ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என அனைத்து ரயில்வே பிரிவுகளுக்கும் ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

  ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் கழிவுகள் நாளுக்கு நாள் மலைபோல் குவிந்து வருகிறது. இதனால் சுற்றுப்புறச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்படுகிறது. பல்வேறு நாடுகளும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நம் நாட்டிலும் பல்வேறு மாநில அரசுகள் குறைந்த மைக்ரான் கேரி பேக், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப், பாலித்தீன் பேப்பர் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளன. இருப்பினும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடரத்தான் செய்கிறது.

  கேரி பேக்

  பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என மக்களுக்கு கோரிக்கை விடுத்தார். இதன் எதிரொலியாக ரயில்வே அமைச்சகம் தனது நெட்வொர்க்கில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை நிறுத்த முடிவு செய்தது. மேலும், அக்டோபர் 2 முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மீதான தடை அமலுக்கு வருவதாக அனைத்து ரயில்வே பிரிவுகளுக்கும் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

  ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள்

  ரயில்வே அமைச்சகத்தின் சுற்றறிக்கையில், அக்டோபர் 2ம் தேதி முதல் 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கான தடை அமலுக்கு வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகுவதை குறைக்கவும், அவற்றை சுற்றுப்புறச்சூழலுக்கு ஏற்றவாறு அகற்றவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் அவசியம். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க விலை குறைவான மறுமுறை பயன்படுத்தும் பைகளை பயன்படுத்துங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை குறையுங்கள் என தனது பணியாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.