அகங்காரமும் தூய்மையான பக்தியும்!

  0
  1
  பக்தி

  குருவாயூரில் நடந்த உண்மை சம்பவம் இது. குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், உபன்யாசம் செய்து கொண்டிருந்தார் அர்ச்சகர். தினமும் ஆயிரகணக்கில் பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து அர்ச்சகரின் உபன்யாசத்தைக் கேட்டபடி இருந்தார்கள். அந்த ஊரில் வசித்து வந்த பூந்தானம் என்ற பக்தரும் அர்ச்சகரின் உபன்யாசத்தைக் கேட்டு மெய் மறந்து நின்றார். உபன்யாசம் முடிந்து வெளி வந்த அர்ச்சகர், தினந்தோறும் வருவதால் பூந்தானத்தை பார்த்து நலம் விசாரித்தார். 

  குருவாயூரில் நடந்த உண்மை சம்பவம் இது. குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், உபன்யாசம் செய்து கொண்டிருந்தார் அர்ச்சகர். தினமும் ஆயிரகணக்கில் பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து அர்ச்சகரின் உபன்யாசத்தைக் கேட்டபடி இருந்தார்கள். அந்த ஊரில் வசித்து வந்த பூந்தானம் என்ற பக்தரும் அர்ச்சகரின் உபன்யாசத்தைக் கேட்டு மெய் மறந்து நின்றார். உபன்யாசம் முடிந்து வெளி வந்த அர்ச்சகர், தினந்தோறும் வருவதால் பூந்தானத்தை பார்த்து நலம் விசாரித்தார். 
  அர்ச்சகருடைய பேச்சில் ஞானம், பக்தியை விட, ஏளனமும், கர்வமும் தலைதூக்கி இருந்தன. அதை புரிந்து கொள்ளாத பூந்தானம், ‘உத்தமரே… அவ்வப்போது நானும் கண்ணனை தியானம் செய்கிறேன். இருப்பினும், கண்ணனின் முழு வடிவத்தை தியானிக்க முடியாமல் சிரமப்படுகிறேன். நல்லதொரு வழியை காட்டுங்கள்’ என, பணிவோடு வேண்டினார்.

  temple

  அவருடைய அப்பாவித்தனம், அர்ச்சகரின் வித்யா கர்வத்தை தூண்ட, ‘பூந்தானம்… நீ அந்த பரந்தாமனின் பக்தன் தானே… அவனை எருமை மாடு வடிவத்தில் கூட தியானிக்கலாமே…’ என, விளையாட்டாக கூறினார். அர்ச்சகரின் வார்த்தைகளை அப்படியே நம்பி, கண்ணனை எருமை மாடு வடிவத்திலேயே தியானிக்க துவங்கினார், பூந்தானம். அன்றிலிருந்து தினந்தோறும் கண்ணனை எருமைமாடு வடிவத்தில் மனதுள் இருத்தி தியானிக்க ஆரம்பித்தார். அவருடைய தீவிரமான தியானத்தால், அவருக்கு, எருமை மாடு வடிவத்திலேயே காட்சி கொடுத்தார், கண்ணன்.
  ஒருநாள், குருவாயூர் கோவில் உற்சவத்தின் போது, உற்சவரை வெளியே கொண்டு வர முயன்றனர்; முடியவில்லை. படிக்கட்டில் ஏதோ இடிப்பதை போல இருந்தது. ஆனால், யார் கண்களுக்கும் எதுவும் தெரியவில்லை. அப்போது, சற்று தூரத்தில் இருந்த பூந்தானத்தின் கண்களுக்கு, உற்சவ மூர்த்தி, எருமை மாடு வடிவத்தில் காட்சியளித்தார். அம்மகிஷத்தின் கொம்பு இடிப்பதாலேயே உற்சவர் வெளிவர முடியவில்லை என்பது, பூந்தானத்திற்கு புரிந்தது.
  அவர் உடனே, ‘சற்று வலது கை புறமாக சாய்த்து எடுங்கள்; அங்கு தான் கொம்பு இடிக்கிறது. அதனால் தான், சுவாமியால் வெளி வர முடியவில்லை…’ என்றார். அவர் சொல்வது புரியாவிட்டாலும், அப்படியே செயல்பட்டனர்; உற்சவர் வெளியே வந்து விட்டார். அதே சமயத்தில், கர்ப்பகிரகத்தில் சுவாமிக்கு பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சருக்கு, இறைவன், எருமை மாடு வடிவில் காட்சியளித்து, ‘என் பக்தனான பூந்தானம், இவ்வடிவில் தான், என்னை தியானித்து வருகிறான்…’ என, விவரித்தார்.
  அர்ச்சகருக்கு, கண்ணனின் கருணையும், அக்கருணைக்கு பாத்திரமான பூந்தானத்தின் தூய்மையான பக்தியும் புரிந்தது. வேகமாக வெளியில் வந்து, பூந்தானத்தின் திருவடிகளில் விழுந்து, ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அப்போது தான், மற்றவர்களுக்கு, பூந்தானம் ஏன் கொம்பு இடிக்கிறது என்று கூறினார் என்பதன் காரணம் புரிந்தது. அகங்காரம் கொண்ட பக்தியை விட, அன்புள்ளம் கொண்ட எளியவர்களின் பக்திக்கே இறைவன், இரங்கி அருள்வான்