பொது இடத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை… பைக்கில் எடுத்துச் சென்ற போலீஸ்… பாஜகவினரின் செயலால் பரபரப்பு

 

பொது இடத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை… பைக்கில் எடுத்துச் சென்ற போலீஸ்… பாஜகவினரின் செயலால் பரபரப்பு

பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட முயன்ற பாஜகவினரின் செயலால் காவல்துறையினர் விரைந்து வந்த அங்கிருந்த சிலையை அகற்றி பைக்கில் எடுத்து சென்று கரைத்தனர். இந்த சம்பவம் மணப்பாறையில் நடந்துள்ளது.

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்துவதற்கும், விநாயகர் ஊர்வலத்திற்கும் தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. மேலும், மக்கள் வீடுகளில் இருந்தே விநாயகரை வழிபட்டு, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும்படி தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அத்துடன், சிறிய கோயில்கள் திறக்கப்பட்டுள்ளதால் அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், பக்தர்கள், தனிமனித இடைவெளியை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜகவினர் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். விநாயகர் சிலைக்கு மாஸ்க் அணிவித்து, சிலை அருகில் மத்திய அரசின் சாதனைகள் விளக்கும் வாசகங்களை வைத்தும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

இந்த நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை அகே உள்ள கொட்டபட்டியில் பொது இடத்தில் பாஜக சார்பில் இன்று விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் சிலையை எடுத்து கொள்ளுங்கள் என்றும் பாஜகவினரிடம் கூறினர். ஆனால் அவர்கள், விநாயகர் சிலையை அகற்ற முடியாது என்று கூறியதோடு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், காவல்துறையினரின் உதவியுடன் சிலையை அங்கிருந்து அகற்றினர். பின்னர் சிலையை பைக்கில் எடுத்து சென்ற காவல்துறையினர், குளத்தில் கரைத்தனர். பாஜகவினரின் இந்த செயலால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.