`கையில் கந்தவேல் டாட்டூ ; வீர வேல் முழக்கம்!’- கறுப்பர் கூட்டத்துக்கு எதிராக களமிறங்கிய பாஜக மகளிரணி

 

`கையில் கந்தவேல் டாட்டூ ; வீர வேல் முழக்கம்!’- கறுப்பர் கூட்டத்துக்கு எதிராக களமிறங்கிய பாஜக மகளிரணி

கந்தகஷ்டி கவசம் குறித்து இழிவாக வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டத்தை கண்டித்து கோவையில் பாஜக மகளிரணி நிர்வாகிகள் போராட்டத்தில் குதித்தனர்.

கந்த சஷ்டி கவசத்தை இழிவாக விமர்சித்து வீடியோ பதிவேற்றிய கறுப்பர் கூட்டம் சேனல் நிர்வாகிகள் செந்தில்வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், சுரேந்திரன் மீது ஏற்கெனவே ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரையும் ஜுலை 30 வரை காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. செந்தில்வாசன் ஏற்கெனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு நிர்வாகியான சுரேந்திரனும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதேபோல், நபிகள் நாயகம் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் காட்சிப் பதிவு வெளியிட்ட இந்து தமிழர் பேரவையைச் சேர்ந்த கோபால் என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதனிடையே, கறுப்பர் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகிறது. கோவையில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்பினர் கந்தவேலின் படத்தை சாலையில் வரைந்து சென்றனர். அதற்காக பலரது மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் 30 அடி உயர கந்தவேலை அடையாளம் தெரியாத நபர்கள் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

`கையில் கந்தவேல் டாட்டூ ; வீர வேல் முழக்கம்!’- கறுப்பர் கூட்டத்துக்கு எதிராக களமிறங்கிய பாஜக மகளிரணி

இது குறித்து நஞ்சுண்டாபுரம் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். இந்த நிலையில், கோவை இடையர்பாளையம் பகுதியில் பாஜக மாநில இளைஞர் அணி செயலர் பிரீத்தி லட்சுமி தலைமையில் மகளிர் அணியினர் தங்களது கைகளில் கந்தவேலை வரைந்து கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அவர்கள் சாலையில் ‘வெற்றி வேல் வீர வேல்’ என்று பூக்கோலம் போட்டு கந்த சஷ்டி கவசத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

`கையில் கந்தவேல் டாட்டூ ; வீர வேல் முழக்கம்!’- கறுப்பர் கூட்டத்துக்கு எதிராக களமிறங்கிய பாஜக மகளிரணி

பாஜக மாநில இளைஞர் அணி செயலர் பிரீத்தி லட்சுமி கூறுகையில், “கந்த கஷ்டி கவசம் குறித்து தவறான கருத்தை மக்கள் மத்தியில் கறுப்பர் கூட்டத்தினர் கொண்டு சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. மதத்தையோ, தனி மனிதரையோ விமர்சித்து பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது. இந்து மதத்தை பற்றியோ அல்லது எந்த மதத்தை பற்றியோ இழிவாக பேசினால் எங்கள் ஒற்றுமை கையோங்கும்” என்றார்.