பெண்களை மதிக்கும் கட்சி பா.ஜ.க! – எல்.முருகன் சொல்கிறார்

 

பெண்களை மதிக்கும் கட்சி பா.ஜ.க! – எல்.முருகன் சொல்கிறார்

பெண்களை மதிக்கும் கட்சி பாரதிய ஜனதா கட்சி என்று அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பா.ஜ.க மூத்த நிர்வாகி கரு.நாகராஜன் பேசும் போது கரூர் எம்.பி ஜோதிமணியை மிக மோசமான வகையில் விமர்சித்தார். இதற்கு தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. பா.ஜ.க நிர்வாகிகள் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சிகளில் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் இனி பங்கேற்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஜோதிமணியை ஆபாசமாக விமர்சித்தது சரிதான், இனி மோடியை விமர்சித்தால் இப்படித்தான் விமர்சிப்போம் என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா ட்வீட் செய்தார். பா.ஜ.க-வினரும் ஜோதிமணியை ஆபாசமாக விமர்சித்ததை நியாயப்படுத்திப் பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனிடம் கேட்டபோது, “பா.ஜ.க பெண்களை மதிக்கும் ஒரு கட்சி. தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும்போது தனி மனித தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.

முன்னதாக அவர் பேசுகையில், “இதுவரை 35 லட்சம் மோடி கிட் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் முக கவசம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் 35 லட்சம் பேருக்கு முகக் கவசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கோடி பேருக்கு முக கவசம் வழங்க உள்ளோம்.

மத்திய அரசு ரூ.1.75 லட்சம் கோடிக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. 21 லட்சம் கோடிக்கு பல்வேறு துறைகள் சுய சார்புடன் செயல்படத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தும் நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒன்றிணைவோம் வா என்று ஒரு லட்சம் மனுக்களைப் பெற்றுள்ளார். அதை தலைமைச் செயலாளரிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்த தயாநிதி மாறன், தங்களை மூன்றாம் தர மனிதர்களைப் போல நடத்தியதாகப் பேட்டி கொடுக்கிறார். இப்படி குறிப்பிட்ட சமூக மக்கள் மனம் புண்படும் வகையில் பேசிய தயாநிதி மாறனை தி.மு.க தலைவர் கண்டிக்க வேண்டும்.  ஊரடங்கு நேரத்தில் இவ்வளவ மனுக்களை எப்படி பெற்றார்கள் என்றே தெரியவில்லை” என்றார்.