சிக்கன் பிரியாணி சாப்பிட்டு பறவை காய்ச்சலை பரப்ப விவசாயிகள் சதித்திட்டம்… பா.ஜ.க. எம்.எல்.ஏ. பகீர் குற்றச்சாட்டு

சிக்கன் பிரியாணி சாப்பிட்டு பறவை காய்ச்சலை பரப்ப விவசாயிகள் சதித்திட்டம்… பா.ஜ.க. எம்.எல்.ஏ. பகீர் குற்றச்சாட்டு

சிக்கன் பிரியாணி சாப்பிட்டு பறவை காய்ச்சலை பரப்புவதற்கான சதித்திட்டத்தை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர் என்று ராஜஸ்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் கூறியது பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள ராம்கஞ்ச்மண்டி சட்டப்பேரவை தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. மதன் திலாவர். இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருவர். தற்போது அது போன்று ஒன்று சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். இந்த முறை வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை பறவை காய்ச்சலுடன் தொடர்பு படுத்தி பேசி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

சிக்கன் பிரியாணி சாப்பிட்டு பறவை காய்ச்சலை பரப்ப விவசாயிகள் சதித்திட்டம்… பா.ஜ.க. எம்.எல்.ஏ. பகீர் குற்றச்சாட்டு
மதன் திலாவர்

மதன் திலாவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அதில் திலாவர் கூறியிருப்பதாவது: வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகள் என்று அழைக்கப்படுபவர்கள் நாட்டை பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் ஒரு போராட்டத்தை நடத்தவில்லை, ஆனால் ஒரு சுற்றுலாவிற்கு வருகிறார்கள். அவர்கள் கோழி பிரியாணி, உலர்ந்த பழங்கள் மற்றும் அனைத்து வசதிகளையும் அனுபவித்து வருகின்றனர். போராட்டத்தில் அமர்ந்து இருப்பவர்கள் தங்களது அடையாளத்தை மறைத்து அமர்ந்து உள்ளார்கள்.

சிக்கன் பிரியாணி சாப்பிட்டு பறவை காய்ச்சலை பரப்ப விவசாயிகள் சதித்திட்டம்… பா.ஜ.க. எம்.எல்.ஏ. பகீர் குற்றச்சாட்டு
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)

அவர்கள் தீவிரவாதிகள், குற்றவாளிகள் மற்றும் விவசாயிகளின் எதிரிகளாக இருக்கலாம். அவர்கள் நாட்டை அழிக்க விரும்புகிறார்கள். சிக்கன் பிரியாணி சாப்பிட்டு பறவை காய்ச்சலை பரப்புவதற்கான சதித்திட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். அரசாங்கம் வேகமாக செயல்படவில்லையென்றால், போராட்டக்காரர்களை அகற்றவில்லையென்றால், நாட்டில் பெரிய அளவில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. அரசாங்கம் முதலில் ஒரு மென்மையான அணுகுமுறையை பயன்படுத்த வேண்டும். முறையீடுகள், கோரிக்கைகள் வாயிலாக அவர்களை அகற்ற முயற்சி செய்ய வேண்டும். அதன் பிறகும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடவில்லை என்றால் அரசு கடுமையான நடவடிக்கைகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் பேசியிருந்தார்.