`ரூ.4.63 கோடி மோசடி; இரவில் சுற்றிவளைத்த போலீஸ்!- பெரம்பலூரில் சிக்கிய பாஜக பிரமுகர் எல்ஃபின் ராஜா

 

`ரூ.4.63 கோடி மோசடி; இரவில் சுற்றிவளைத்த போலீஸ்!- பெரம்பலூரில் சிக்கிய பாஜக பிரமுகர் எல்ஃபின் ராஜா

ரூ.4.63 கோடி மோசடி புகாரில் பாஜகவை சேர்ந்த எல்ஃபின் ராஜாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எல்ஃபின் என்ற நிறுவனத்தை ராஜா, அவரது தம்பி ரமேஷ் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின வேலை ஆட்களை பிடிப்பதுதான். இதில் சேர்ந்தவர்கள், நிறுவனத்தின் பெயரில் மளிகை பொருட்களை விற்க ஆட்களை சேர்ப்பார்கள். அப்படி விற்பனை செய்து ஆட்களை பிடித்துக் கொடுத்தால் அவர்களுக்கு கமிஷன் கிடைக்கும். மளிகை பொருட்களில் தொடங்கிய இவர்களின் பிசினஸ், பின்னர் வீடு கட்டிக் கொடுப்பது, காலி இடங்களை வாங்கி விற்பது போன்ற தொழில்களில் கால் பதித்தது. இதனை நம்பி ஏராளமானோர் சேர்ந்தனர். இதன் பின்னர் ‘அறம் மக்கள் நலசங்கம்’ என்று தொடங்கிய ராஜா, மக்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றத் தொடங்கினார். இதையடுத்து ஏமாந்தவர்கள் ராஜா மீது காவல்துறையில் புகார் அளித்தனர். அந்த வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

இதனிடையே, ராஜா, அவரின் சகோதரர் எஸ்.ஆர்.கே.ரமேஷ்குமார் ஆகியோர் ரூ.4.63 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த காக்கிவாடன்பட்டி, மம்சாபுரத்தைச் சேர்ந்த பட்டாசு ஆலை அதிபர் கோவிந்தராஜ் என்பவர் அப்போதைய மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து, ஒரு கோடி ரூபாய் கோவிந்தராஜிடம் ராஜா கொடுத்துள்ளார். மீது பணத்தை ஓராண்டுக்குள் கொடுத்து விடுவதாக காவல்துறையினரிடம் ராஜா எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால், எல்ஃபின் ராஜா சொன்னபடி பணம் கொடுக்கவில்லை. இதனால், மீண்டும் மதுரை குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார் கோவிந்தராஜ் . இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ராஜாவை தேடி வந்தனர். இந்த நிலையில், அதிகாலை 2 மணியளவில் பெரம்பலூர் அருகேயுள்ள பாடாலூர் என்ற இடத்தில் கைது ராஜாவை சுற்றிவளைத்து காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் எல்ஃபின் ராஜா , அவரது சகோதரர் ரமேஷ் ஆகியோர் பாஜக மாநிலத் தலைவர் முருகனை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.