தமிழக அரசின் பொங்கல் பரிசை விமர்சித்தேனா? அண்ணாமலை விளக்கம்!

 

தமிழக அரசின் பொங்கல் பரிசை விமர்சித்தேனா? அண்ணாமலை விளக்கம்!

ஓட்டுக்காக கொடுக்கும் 2000 ரூபாயையும், பொங்கல் பரிசாக அரசாங்கம் வழங்கும் 2500 ரூபாயையும் ஜோடித்து, மக்களை குழப்பவும் பெரும் முயற்சி செய்கின்றன என்று பாஜக துணை தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

தமிழக அரசின் பொங்கல் பரிசை விமர்சித்தேனா? அண்ணாமலை விளக்கம்!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வேளாண் சட்ட நன்மைகள் குறித்து மக்கள் மத்தியில் பேசிய தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை, ” தமிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ. 2000 ஆக தருவதுதான் தமிழக அரசியல். 2 ஆயிரத்தை நம்பி 5 ஆண்டுகளை தமிழக மக்கள் அடகு வைத்து விடக்கூடாது. பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை எனில் காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள் தான் அரசியல்வாதியாக வருவர் ” என்று விமர்சித்திருந்தார். இதையடுத்து அண்ணாமலை தமிழக அரசின் பொங்கல் பரிசு குறித்தது தான் விமர்சிப்பதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில் பாஜக துணை தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “சில ஊடகங்கள், பொங்கலுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மக்களுக்கு ரூபாய் 2500 கொடுக்க இருப்பதை நான் எதிர்ப்பதுபோல, கோயம்புத்தூரில் நான் சொன்னதாக, தவறாக சித்தரித்து கூற முயற்சிக்கிறார்கள், அதை பிரசுரமும் செய்கிறார்கள் .

பொங்கலுக்கு கொடுக்கும் தொகையை முதலமைச்சர் அவர்கள் ரூபாய் ஆயிரத்திலிருந்து இரண்டாயிரத்து ஐநூறாக உயர்த்தி இருப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். கொரோனா இருக்கும் இக்காலகட்டத்தில், அரசாங்கம் வழங்கும் இந்த பணம் மக்களுக்கு உதவியாக இருக்கும். தேர்தல் நேரத்தில் , 2000 ரூபாயை ஓட்டுக்காக கொடுப்பதை, அப்படிப்பட்ட அரசியலை பாஜக என்றும் விரும்பாது, அதை என்றும் செய்யாது என்று நான் கோயம்புத்தூரில் பேசியதை தவறாக சித்தரித்திருக்கிறார்கள். நான் கூறிய ஓட்டுக்காக கொடுக்கும் 2000 ரூபாயையும், பொங்கல் பரிசாக அரசாங்கம் வழங்கும் 2500 ரூபாயையும் ஜோடித்து, மக்களை குழப்பவும் பெரும் முயற்சி செய்கின்றன சில ஊடகங்கள். உண்மை என்றும் புரிய வேண்டும், பொய்கள் யாவும் அழிய வேண்டும்.வாழ்க,வளர்க தமிழ்நாடு” என்றுபதிவிட்டுள்ளார்.