மனசு மாறிய சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள்.. சிக்கலில் ஹரியானா பா.ஜ.க. அரசு.. நம்பிக்கையில்லா தீர்மானம் கோரும் காங்கிரஸ்

 

மனசு மாறிய சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள்.. சிக்கலில் ஹரியானா பா.ஜ.க. அரசு.. நம்பிக்கையில்லா தீர்மானம் கோரும் காங்கிரஸ்

ஹரியானாவில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெற்றதையடுத்து, ஆளும் கட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

ஹரியானாவில் பா.ஜ.க.-ஜே.ஜே.பி. கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. தற்போது அம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.-ஜே.ஜே.பி. கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு அளித்த சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் 2 பேர் தங்களது ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். இதனையடுத்து இதுதான் சரியான சமயம் ஆட்சியை கலைக்க என்று காங்கிரஸ் கட்சி களத்தில் இறங்கியுள்ளது.

மனசு மாறிய சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள்.. சிக்கலில் ஹரியானா பா.ஜ.க. அரசு.. நம்பிக்கையில்லா தீர்மானம் கோரும் காங்கிரஸ்
முதல்வர் மனோகர் லால் கட்டார்

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபேந்தர் சிங் ஹூடா, அம்மாநில கவர்னரை சந்தித்தார். அப்போது, ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்து விட்டதால் நம்பிக்கையில்லா தீர்மானம் கோருகிறோம். அதற்காக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் கவர்னர் இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என தெரிகிறது. மேலும் வரும் மார்ச் 5ம் தேதியன்று அம்மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

மனசு மாறிய சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள்.. சிக்கலில் ஹரியானா பா.ஜ.க. அரசு.. நம்பிக்கையில்லா தீர்மானம் கோரும் காங்கிரஸ்
பூபேந்தர் சிங் ஹூடா

பூபேந்தர் சிங் ஹூடா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆளும் பா.ஜ.க.-ஜே.ஜே.பி. கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளோம். அரசுக்கு ஆதரவு அளித்து வந்த இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை திரும்ப பெற்று விட்டனர். மேலும் கூட்டணிக்குள் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு மிகவும் ஊழல் படிந்த அரசு என அதிருப்தியுடன் உள்ளனர். ஆக, முதல்வர் மனோகர் லால் கட்டார் அரசு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மக்களின் ஆதரவையும் இழந்து விட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் கோரும்போதுதான் யார் யாருடன் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 90 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவையில் பா.ஜ.க.வுக்கு 40 உறுப்பினர்களும், ஜே.ஜே.பி. கட்சிக்கு 10 உறுப்பினர்களும் உள்ளனர். தற்போது சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் தான் ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். ஆகையால் பா.ஜ.க. கூட்டணி அரசு கவிழ வாய்ப்பில்லை என்று தகவல். அதேசமயம் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.