இந்திரனின் ஆணவத்தை போக்கியநாள் ‘போகி’! பண்டிகையும் புராண கதையும்…

 

இந்திரனின் ஆணவத்தை போக்கியநாள் ‘போகி’! பண்டிகையும் புராண கதையும்…

தமிழ் மாதமான மார்கழியின் கடைசி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலு என்ற பழமொழியே போகி பண்டிகையின் சுருக்கம், வீட்டில் தேவையில்லாத பொருட்களை அகற்றி, நம்மிடமுள்ள தீய குணங்களை சுட்டெரிக்கும் விழாவாக இவ்விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது பண்டிகையின் தத்துவமாகும். துயரங்களை போக்கி என்ற சொல்லே மருவி போகியானது.

இந்திரனின் ஆணவத்தை போக்கியநாள் ‘போகி’! பண்டிகையும் புராண கதையும்…

போகி பண்டிகைக்கும் இந்திர தேவன்  மற்றும் கிருஷ்ண பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் வணங்கி வந்தனர். இந்திரனுக்கு கொடுக்கப்பட்டு வந்த இந்த மரியாதை அவருக்குள் கர்வத்தையும், ஆணவத்தையும் அதிகரிக்க செய்தது. மற்றவர்களை காட்டிலும் நான் தான் மிகவும் சக்திவாய்ந்தவர் என்ற கர்வமும் ஆணவமும் அவருக்கு ஏற்பட்டது. இதற்கு பாடம் கற்பிக்க விரும்பிய கிருஷ்ணர், தன்னுடைய ஆடு மேய்க்கும் நண்பர்களை கோவர்தன மலையை வணங்க செய்தார். தன்னை வணாங்காது மலையை வணங்குகின்றனர் என ஆத்திரமடைந்த இந்திர தேவன், இடைவிடாத இடி, மின்னல், கனமழை மற்றும் வெள்ளத்தை உருவாக்க மேகங்களை அனுப்பினார். இதனை அறிந்த கிருஷ்ண பகவான் ஆடு மேய்ப்பவர்களையும், ஆடுகளையும் பாதுகாக்க, மிகப்பெரிய கோவர்தன மலையை தன் சிறிய கைகளில் தூக்கினார்.  இந்திர தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க அந்த மலையை தூக்கி சுமந்தபடியே நின்றார் கிருஷ்ணர். ஏழு நாட்களுக்கு நீடித்தது இந்திர தேவன் அனுப்பிய மழை. அதன் பின் தன் தவறையும் கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்து கொண்டார் இந்திர தேவன். தன்னைவிட பலமானவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து ஆணவத்தை தூக்கியெறிந்தான். அன்று முதல் இந்திரனை கௌரவிக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கிருஷ்ணர் அனுமதித்தார். இதுவே போகி கொண்டாட்டத்திற்கு விதையாக அமைந்தது. மேலும் இந்திரனுக்கு போகி என்ற மற்றொரு பெயரும் உண்டு.. மகிழ்ச்சியானவன், போகங்களை அனுபவிப்பவன் என்பதே இதன் பொருளாகும்.அன்றைய தினம் அவரை வணங்கினால் வேளாண் தொழில் செழிக்கும் என்பது ஐதீகம்.

போகி தினத்தன்று இறந்த நம் முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து தீப ஆராதனைச் செய்து வணங்க வேண்டுமென ஜோதிடம் சொல்கிறது.