97 அடியாக உயர்ந்த பவானிசாகர் அணை நீர்மட்டம்… கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுப்பு!

 

97 அடியாக உயர்ந்த பவானிசாகர் அணை நீர்மட்டம்… கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுப்பு!

சத்தியமங்கலம்

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 97.22 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. 105 கொள்ளளவு கொண்ட இந்த அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப் பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நேற்று முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, பவானி ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர்திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நீர் நேற்று பவானிசாகர் அணையை வந்தடைந்தது.

97 அடியாக உயர்ந்த பவானிசாகர் அணை நீர்மட்டம்… கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுப்பு!

இதனால் நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 97.22 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 456 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி – அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் 900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் நேற்று மாலைக்குள் 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

105 அடி வரை கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணைக்கு 102 ஆடி வந்தாலே அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்பது விதிமுறை. தற்போது தொடர்ந்து, தண்ணீர் அதிகரித்து வருவதால், கரையோரப் பகுதி பொதுமக்கள் தாழ்வான இடங்களில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும், வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.