ஆரோக்கியமான முறையில் வெயிட் லாஸ் செய்வது எப்படி தெரியுமா?

 

ஆரோக்கியமான முறையில் வெயிட் லாஸ் செய்வது எப்படி தெரியுமா?

உடல் பருமன் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்னையாக மாறிக்கொண்டே இருக்கிறது. வேக வேகமாக அதிகரித்த உடல் எடையை குறைக்க முடியாமல் பல ஆண்டுகளாக புலம்புபவர்கள் அதிகம். சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் என்று கண்ட கண்ட பவுடர், மாத்திரை, மருந்துகளை வாங்கி பயன்படுத்தி அதன் பக்கவிளைவுகளால் அவதியுறுவார்கள். சிலரே ஜிம்முக்கு ஒரு வாரத்துக்கு சென்று பிறகு நமக்கு இதெல்லாம் செட் ஆகாது என்று ஓடிவிடுவார்கள். உடல் எடையைக் குறைக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வழிகளைப் பற்றிப் பார்ப்போம்!

ஆரோக்கியமான முறையில் வெயிட் லாஸ் செய்வது எப்படி தெரியுமா?

போதுமான அளவில் தண்ணீர் அருந்துவது உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் செய்ய வேண்டிய முதல் காரியம். பெரும்பாலானவர்கள் தினசரி போதுமான அளவு தண்ணீர் அருந்துவது இல்லை. போதுமான அளவு தண்ணீர் அருந்துவது உடலின் வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை தூண்டும்.

சர்க்கரை அதிகம் உள்ள குளிர் பானங்களைத் தவிர்க்க வேண்டும். அது கார்பனேட்டட் பானமாக இருந்தாலும் சரி, ஃபிரஷ் ஜூஸாக இருந்தாலும் சரி. இவற்றை எல்லாம் தவிர்ப்பது கட்டாயம். அதிகப்படியான சர்க்கரை உடல் எடையை மேலும் அதிகரிக்கச் செய்யுமே தவிர அதனால் வேறு எந்த பயனும் இல்லை.

சாப்பிடும் அளவைக் கண்காணிக்க வேண்டும். அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அரை வயிற்றுடன் இருக்க வேண்டியது இல்லை. அதற்காக போதும் என்ற நிலையைத் தாண்டி அதிகம் எடுக்க வேண்டாம்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் ஹோட்டல் உணவுகளுக்கு குட்பை சொல்ல வேண்டும். வீட்டில் தயாரித்த உணவு என்றால் நம்முடைய உடல் நலத்துக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும். குறைவான எண்ணெய், உப்பு மற்றும் அதிக ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் இருக்கும். இதன் காரணமாக அதிக கலோரி கிடைப்பது தவிர்க்கப்படும்.

உணவில் அதிக புரதச்சத்தை சேர்க்க வேண்டும். இதுவும் வயிறு நிறைந்த உணர்வைத் தருவதுடன் வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கத் தூண்டும்.

பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசிக்கு பதில் சிவப்பு, பழுப்பு அரிசியை பயன்படுத்தலாம். இவை ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். வயிறு நிறைந்த உணர்வு கிடைப்பதுடன் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும்.

உணவில் அரிசிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறைத்து காய்கறி, பழங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சாலட், கூட்டு, பொரியலை அதிக அளவில் சேர்த்துக்கொள்ளலாம். இவை எல்லாம்  கலோரி குறைவானது என்பதுடன், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்துவிடும்.

இவற்றுடன் உடற்பயிற்சியையும் தொடங்குங்கள். கடின உடற்பயிற்சி வேண்டாம். வீட்டுக்கு அருகே 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தாலே போதும். கொஞ்சம் கொஞ்சமாக நடைப்பயிற்சியின் தீவிரத்தை அதிகரிக்க வேண்டும். அதன் பிறகு ஜிம்மில் செய்வது போன்று வெயிட் உடற்பயிற்சிகள் செய்யலாம்.

இவற்றை எல்லாம் பின்பற்றினால் உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமானதாக இருக்காது!