மூளையை இளமையாக வைத்திருக்க உதவும் உணவுகள்!

 

மூளையை இளமையாக வைத்திருக்க உதவும் உணவுகள்!

நம்முடைய ஒவ்வொரு அசைவுக்கும் காரணம் மூளைதான். மூளையின் உத்தரவு இன்றி ஒரு விரல் கூட அசையாது. இதயம் துடிப்பது, நுரையீரல் காற்றை சுத்தம் செய்வது, சிந்திப்பது, முடிவெடுப்பது என அனைத்துக்குமே மூளைதான் காரணம். மூளையின் செயல்திறனை மேம்படுத்த, ஆரோக்கியத்தை பராமரிக்க உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. மூளைக்கான உணவுகள் பற்றி இங்கே பார்ப்போம்.

மூளையை இளமையாக வைத்திருக்க உதவும் உணவுகள்!

மூளைக்கான உணவு என்றாலே எண்ணெய் சத்து மிக்க மீன்கள்தான் முதலிடம் பெறும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. மனித மூளை கொழுப்பால் ஆனது. அதில் பாதி ஒமோகா 3 கொழுப்பு அமிலத்தால் ஆனது. எனவே, மூளை செல்கள் உருவாக, நினைவு திறன் சரியாக இருக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அவசியம்.

உடலுக்குக் கெடுதல் என்று சொல்லப்படும் காபி மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் உணவாகும் காபியில் உள்ள காஃபின் என்ற வேதிப்பொருள் மூளையின் விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும், நம்முடைய மனநிலை, கவனிக்கும் திறன் உள்ளிட்டவற்றை மேம்படுத்தச் செய்யும் ஆற்றல் உள்ளது.

நாம் நம்முடைய உணவுகளில் பயன்படுத்தும் மஞ்சள் மூளையை பாதுகாக்கும் உணவாகும். மஞ்சளிள் உள்ள குர்குமின் என்ற ரசாயனம் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையை நீக்குகிறது. இதன் காரணமாக மூளை செல்களுக்கு தேவையான உணவு, ஆக்சிஜன் கிடைக்கிறது. மேலும் நினைவுதிறனை மேம்படுத்தும் ஆற்றல் அதற்கு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நல்ல மனநிலைக்கு காரணமாக டோபோமைன், செரட்டோனின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் மூளை செல்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

பூசனி விதை மிகச்சிறந்த ஆன்டி ஆக்ஸிடண்ட் ஆகும். இது ஃப்ரீ ராடிக்கல்ஸ் சிதைவை தடுத்து நிறுத்துகிறது. துத்தநாகம் பற்றாக்குறைதான் மன அழுத்தம், அல்சைமர், பார்க்கின்சன் போன்ற மூளை தொடர்பான பாதிப்புகள் வருவதற்கு காரணமாக உள்ளது. இதில் துத்தநாகம் உள்ளது. தொடர்ந்து எடுக்கும் போது மூளை ஆரோக்கியமாக இருக்கும். மேலும், மக்னீஷியம், தாமிரம் போன்றவையும் மூளையின் செயல்திறனை மேம்படுத்துகின்றன.

வால்நட், பாதாம் போன்ற நட்ஸ் வகைகள் மூளைக்கான உணவாகும். இவை இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்துக்கு துணை புரிகின்றன. நட்ஸ் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் இ, நல்ல கொழுப்பு நிறைவாக உள்ளன.

முட்டையில் நல்ல கொழுப்பு, பி6, பி12, ஃபோலேட், கொலைன் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவை மூளையில் உள்ள நியூரோடிஸ்மிட்டர்கள் இயல்பாக இருக்க உதவுகின்றன. இதன் மூலம் மன நலம் மற்றும் நினைவுத் திறன் மேம்படுகிறது.

இவை தவிர க்ரீன் டீ, ஆரஞ்சு பழம், டார்க் சாக்லெட், ப்ரோக்கோலி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, கீரை உள்ளிட்ட உணவுகளும் மூளையின் நலனைக் காக்கும் உணவுகளாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்!