தலைமுடி நீண்டு கருகருவென வளர… இந்த 5 உணவை டிரை செய்து பாருங்க!

 

தலைமுடி நீண்டு கருகருவென வளர… இந்த 5 உணவை டிரை செய்து பாருங்க!

வயது அதிகரிக்க அதிகரிக்க முடி உதிர்வதைத் தடுக்க முடியாமல் பலரும் வேதனை அடைகின்றனர். முடி வளர்ச்சி, உதிர்தல், அதன் ஆரோக்கியம் என அனைத்தும் வயது, பாலினம், ஆரோக்கியம் மற்றும் நாம் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கியமான உணவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. வயது அதிகரித்தல், பாலினத்தை நம்மால் மாற்ற முடியாது. அதே நேரத்தில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது, ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் முடி உதிர்வு உள்ளிட்ட பிரச்னைக்கு ஓரளவுக்கு தீர்வு காண முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அப்படி முடி வளர்ச்சிக்கு உதவி செய்யும் உணவுகள் சிலவற்றைப் பற்றி இங்கே காண்போம்.

தலைமுடி நீண்டு கருகருவென வளர… இந்த 5 உணவை டிரை செய்து பாருங்க!

1) முட்டை

புரதச் சத்து மற்றும் அழகுக்கான வைட்டமின் எனப்படும் பயோடினின் சுரங்கமாக முட்டை உள்ளது. இந்த இரண்டுமே முடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. முடி வளர்ச்சி சீராக, சரியாக இருக்க தினசரி சரியான அளவில் புரதச் சத்து எடுக்க வேண்டியது அவசியம். உயர் தர புரதச் சத்தை போதுமான அளவில் எடுத்து வந்தால் அது முடி உதிர்தல் பிரச்னைக்கு தடை போடும்.

முடியின் வளர்ச்சிக்கு கெரேஷன் (Keration) என்ற புரதம் தேவை. இந்த புரதத்தை உருவாக்க பயோடின் மிக அத்தியாவசியமானதாக உள்ளது. இது தவிர துத்தநாகம், செலீனியம் ஆகிய முடியின் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்துக்கு தேவையான நுண் ஊட்டச்சத்துக்கள் முட்டையில் உள்ளது. இவையே முடியின் வளர்ச்சிக்கு முட்டை மிகச்சிறந்த உணவாக விளங்க காரணமாக இருக்கிறது.

2) கீரை

கீரையில் ஃபோலேட், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட முடியின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. சருமத்தில் உள்ள சுரப்பிகள் சீபத்தை சுரக்க வைட்டமின் ஏ தேவை. இந்த சீபம் சரியான அளவில் சுரந்தால் தலையின் வேர்ப்பகுதி ஆரோக்கியமாக இருக்கும். கீரைகளில் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது. எனவே, முடி ஆரோக்கியமாக வளரும். முடி அதிக அளவில் உதிர இரும்புச்சத்து குறைபாடு மிக முக்கிய காரணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் முருங்கைக் கீரை, கறிவேப்பிலையை அதிகம் எடுத்துக்கொள்ள நம் வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர்.

3) எண்ணெய் சத்துள்ள மீன்கள்

எண்ணெய் சத்து மிக்க மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இதுவும் முடி வளர்ச்சிக்கு உறுதுணை செய்கிறது. 120 பெண்களுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் சத்து மாத்திரை வழங்கி பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு முடி உதிர்தல் குறைந்து, முடியின் அடர்த்தி அதிகரித்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், மீனில் புரதச்சத்து, செலீனியம், வைட்டமின் டி3, பி வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன. இவை அனைத்தும் முடியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன.

4) சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கில் மிக அதிக அளவில் பீட்டா கரோட்டின் சத்து உள்ளது. இது நம்முடைய உடலில் வைட்டமின் ஏ சத்தாக மாற்றப்படுகிறது. வைட்டமின் ஏ முடி வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். மேலும், முடி வளர்ச்சியின் வேகத்தைத் தூண்டி, அடர்த்தியான முடிக்கு காரணமாக இருக்கிறது.

5) அவகேடோ

பட்டர் ஃப்ரூட் எனப்படும் அவகேடோவில் வைட்டமின் இ அதிக அளவில் உள்ளது. இந்த வைட்டமின் இ-யும் முடியின் வளர்ச்சிக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது. மேலும் இதில் கொழுப்பு அமிலங்களும் நிறைவாக உள்ளன. அதுவும் முடியின் வளர்ச்சிக்குத் துணை புரியும்.