வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும் க்ரீன் டீ!

 

வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும் க்ரீன் டீ!

ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான பானம் க்ரீன் டீ. மூளை செயல் திறனை அதிகரிக்கச் செய்யும், கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. க்ரீன் டீயின் ஆய்வு செய்து நிரூபிக்கப்பட்ட சில மருத்துவ பயன்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும் க்ரீன் டீ!

உடலுக்கு நீர்ச்சத்து அளிக்கும் பானம் க்ரீன் டீ. இதில் பாலீஃபீனால்கள் அதிக அளவில் உள்ளன. இவை புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டவை. க்ரீன் டீயில் இஜிசிஜி (epigallocatechin-3-gallate (EGCG))என்ற ரசாயனம் உள்ளது. இது நம்முடைய செல்களில் மாறுபாடு அடைந்து புற்றுநோய் செல்லாக மாறும் தன்மையுடைய செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

மூளை செயல்திறனை மேம்படுத்தும், புத்துணர்வு அளிக்கும் ஆற்றல் க்ரீன் டீக்கு உண்டு. இதில் உள்ள காஃபீன் மூளையைத் தூண்டுகிறது. நம்முடைய விழிப்புநிலை, மனநிலை, செயல்படும் திறன், நினைவாற்றலை அதிகரிக்க இது உதவுகிறது.

மூளை செயல் திறனை அதிகரிப்பதுடன் மட்டுமின்றி குறுகிய கால நினைவு திறனை பாதுகாக்கிறது. இதன் காரணமாக அல்சைமர் போன்ற மறதி நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.

க்ரீன் டீயில் உள்ள catechins என்ற ரசாயனம் வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. இது வாயில் பாக்டீரியா பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. நோய்க் கிருமிகள் தொற்று வேகத்தைக் குறைக்கிறது. வாயில் பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப்படுவதன் மூலம் பற்களின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது க்ரீன் டீ. இன்சுலின் செயல் திறன் குறைவு, இன்சுலினை பயன்படுத்த முடியாத நிலை காரணமாக சர்க்கரை நோய் வருகிறது. க்ரீன் டீ அருந்துவது இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரிக்கச் செய்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கச் செய்வதாக ஜப்பானில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதய நோய், பக்கவாதத்துக்கான வாய்ப்பைக் குறைக்கிறது க்ரீன் டீ. உடலில் எல்.டி.எல் என்ற கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்போது ரத்தக் குழாய்களில் அடைப்பு வருகிறது. இதயத்திற்கான ரத்தம் அல்லது மூளைக்கான ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது மாரடைப்பு / பக்கவாதம் வருகிறது. க்ரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் எல்.டி.எல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதன் காரணமாக ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது.

க்ரீன் டீ நம்முடைய உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தைத் தூண்டுகிறது. இதன் காரணமாக கொழுப்பு எரிக்கப்படுகிறது.

அனைத்துக்கும் மேலாக நம்முடைய ஆரோக்கியமான வாழும் நாட்களை அதிகரிக்கச் செய்கிறது க்ரீன் டீ. ஜப்பானில் 11 ஆண்டுகள் 40 ஆயிரத்து 530 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தினமும் 5 அல்லது அதற்கு மேல் கப் க்ரீன் டீ குடித்தவர்களுக்கு இளம் வயதில் மரணம், இதய நோய், பக்கவாதம் ஆகியவை வருவது குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.