கொடூர வெயிலை சமாளிக்க இதெல்லாம் செய்யுங்கள்!

 

கொடூர வெயிலை சமாளிக்க இதெல்லாம் செய்யுங்கள்!

கோடைக் காலம் தொடங்கிவிட்டது. அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில் எல்லாம் வருவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. வெயிலை சமாளிக்க முடியாமல் பலரும் தற்போது வீடுகளில் முடங்க ஆரம்பித்துள்ளனர். வெயிலை பாதுகாப்பான முறையில் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைப் பற்றிக் காண்போம்!

கொடூர வெயிலை சமாளிக்க இதெல்லாம் செய்யுங்கள்!

என்ன உடுத்துவது?

கோடைக் காலத்தில் வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள். கருப்பு போன்ற அடர் நிறங்கள் வெயிலை ஈர்க்கும். அது உள்ளே அதிக வெப்பத்தைத் தரும். அதிக அளவில் வியர்வையை வெளிப்படுத்தும். எனவே, வெளிர் நிற ஆடைகளை உடுத்துவது நல்லது.

வெளியே செல்லும் போது கண்களுக்கு பாதுகாப்பாக கூலிங் கிளாஸ் அணிய வேண்டும். அது சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர் வீச்சைத் தடுக்கும். கூலிங் கிளாஸின் புற ஊதாக் கதிரைத் தடுக்கும் திறன் 90 முதல் 100 வரை இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

வெளியே செல்லும்போது தலை மற்றும் உடல் மீது வெயில் படாத வகையிலான தலைப்பாகை (ஹேட்) அணியலாம். அது தலையைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் முகத்தில் சூரியக் கதிர் வீச்சல் வரக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கும்.

உடலின் ஈரப்பதத்தைத் தக்க வைப்பது எப்படி?

வெயில் காலத்தில் கொஞ்சம் கூடுதலாகத் தண்ணீர் அருந்துவது தவறு இல்லை. ஃபிரிட்ஜில் வைத்த தண்ணீரைத் தவிர்த்துவிடுங்கள். அதிக வெயிலில் சென்று வந்து திடீரென்று அதிக குளிரான நீரை அருந்துவது உடலை பாதிப்படைய செய்யும். எனவே, அறை வெப்ப நிலையில் உள்ள அல்லது மண் பானை தண்ணீரை அருந்தலாம்.

ஜூஸ்

கார்பனேட்டட் பானங்களைத் தவிர்த்து ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். கோடைக்கே உரிய கிருணிப் பழம், தர்பூசணி, எலுமிச்சை ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை சேர்க்காமல் வெறும் ஜூஸ் எடுத்துக்கொள்வது நல்லது. கூடுதல் கலோரி உடலில் சேர்வதை இது தடுக்கும்.

காபி, டீ, மது பானங்களைத் தவிர்ப்பதன் மூலம் உடலின் ஈரப்பதத்தைத் தக்க வைக்க முடியும். காஃபின், ஆல்கஹால் உள்ள பானங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்தை குறைத்துவிடும்.

கோடைக் காலத்தில் அதிக காரம், மசாலா பொருட்கள் பயன்படுத்தப்பட்ட உணவைத் தவிர்ப்பது நல்லது. அது வியர்வையாக உடலில் உள்ள நீர்ச்சத்தை வெளியேற்றிவிடும்.

அதிக அளவில் நீர்ச்சத்து உள்ள வெள்ளரி, தர்பூசணி போன்ற கோடைக் கால காய்கறி, பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் உடலின் நீர்ச்சத்து இழப்பதைத் தடுக்கலாம். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக காலை 11 முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.