முகப்பரு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாழை!

 

முகப்பரு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாழை!

ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டாலே கல்யாண வீட்டில் சாப்பிட்ட அளவுக்கு எனர்ஜி கிடைத்துவிடும் என்று சொல்வார்கள். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, எளிதில் செரிமானம் ஆகக் கூடிய வாழைப்பழம் பல நன்மைகள் நிறைந்தது என்பது நமக்கு தெரிந்ததுதான். வாழைப் பழம் மற்றும் அதன் தோலைக் கொண்டு நம்முடைய சருமத்தைப் பாதுகாக்க முடியும்.

முகப்பரு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாழை!

வாழையில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது சருமத்துக்கு மிகச் சிறந்த மாய்ஸ்ச்சரைசராக செயல்படுகிறது. அரை வாழைப் பழத்தை நன்கு மசித்து முகத்தில் ஃபேஷியல் பேக் போட்டு 5 – 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் சருமம் பொலிவு பெறும்.

வாழைப் பழத்தின் தோலில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது சருமத்தில் முகப்பரு, கரும்புள்ளி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வளிக்கிறது. வாழைப் பழத்தோலை எடுத்து முகப்பரு மற்றும் கரும்புள்ளி உள்ள இடங்களில் மென்மையாக தேய்க்க வேண்டும். அதில் உள்ள வைட்டமின் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்கள் முகப்பருவுக்கு எதிராக செயல்பட்டு விரைவில் பலன் அளிக்கும்.

சிலருக்கு கண்களைச் சுற்றி வீக்கமாக இருக்கும். இதைப் போக்க வாழைப் பழத்தை மசித்து கண்ணைச் சுற்றித் தடவி 10 – 15 நிமிடங்களுக்கு விட்டுவிட வேண்டும். பிறகு வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவினால் கண்களைச் சுற்றி அதிக அளவில் கோத்திருந்த நீர் வெளியேறும்.

பாதவெடிப்பு பிரச்னைக்கு வாழைப்பழம் மற்றும் வாழைப் பழத் தோல் நல்ல பலனைத் தரும். வாழைப் பழத்தை மசித்து காலில் வெடிப்பு உள்ள பகுதியில் பூச வேண்டும். 10 – 15 நிமிடம் கழித்து கால்களைக் கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி செய்தால் மென்மையான பாதம் கிடைக்கும்.

சிலருக்கு கொசுக் கடி அலர்ஜி காரணமாக தடிப்பு வரும். அந்த நேரத்தில் வாழைப் பழத் தோலைக் கொண்டு அந்த இடத்தில் தேய்த்து வந்தால் தடிப்பு நீங்கும்.

வாழைப் பழத் தோலைக் கொண்டு பற்களை மென்மையாக தேய்த்து வந்தால் இயற்கையான முறையில் பற்கள் பளிச்சிடும்.