5 மணி நேரம் ஆன்லைன் வகுப்பு… மன அழுத்தம்… தடுத்து நிறுத்துங்கள் !-முதல்வர் பழனிசாமிக்கு மாணவர்கள் அனுப்பிய கடிதம்

 

5 மணி நேரம் ஆன்லைன் வகுப்பு… மன அழுத்தம்… தடுத்து நிறுத்துங்கள் !-முதல்வர் பழனிசாமிக்கு மாணவர்கள் அனுப்பிய கடிதம்

“தினமும் 5 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதோடு, மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை செய்ய வேண்டும்” என்று தனியார் கல்லூரி மாணவர்கள், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தலில் தன்னாட்சி பெற்ற ஏ.வி.சி. கலைக்கல்லூரி செயல்படுகிறது. தற்போது, கொரோனா காலம் என்பதால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடிக்கிடக்கின்றன. இதனால், கல்வி கட்டணங்களை வசூலிப்பதற்காக பள்ளிகளும், கல்லூரிகளும் ஆன்லைன் வகுப்பு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகின்றன. கட்டணம் செலுத்தாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் சேர்க்கப்படுவதில்லை. இதனால் மனஉலைச்சலில் பல மாணவர்கள் இருக்கின்றனர். அண்மையில் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டான். இந்த சூழ்நிலையில், ஏ.வி.சி.கலைக்கல்லூரியில் உள்ள விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வரும் மூன்றாமாண்டு மாணவர்கள், “எங்கள் கல்லூரியில் தினமும் 5 மணி நேரம் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடப்பதால், மாணவர்கள் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆன்லைன் வகுப்பு நேரத்தைக் குறைக்கும்படி நாங்கள் வைத்த கோரிக்கையை கல்லூரி நிர்வாகம் ஏற்க மறுப்பதுடன், எங்களை கட்டாயப்படுத்துகிறார்கள். இதில் தலையிட்டு எங்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்று முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த புகார் கடிதத்தில், “மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தலில் இயங்கிவரும் தன்னாட்சி பெற்ற ஏ.வி.சி. கலைக்கல்லூரியில், விஷுவல் கம்யூனிகேஷன் துறையில், நாங்கள் சுமார் 40 மாணவர்கள் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறோம். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, நமது அரசு பொது முடக்கத்தை அறிவித்து, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டுள்ளது. மாணவர்கள் கல்வி பயில்வதில் இருந்து விலகிச் செல்லாமல் இருக்கவும், மாணவர்களுக்கு பாடத்திட்டத்துடன் உள்ள தொடர்பை பராமரிக்கவும், கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் எங்கள் கல்லூரியிலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன.

இந்தச் சூழ்நிலையில், எங்கள் கல்லூரியில், எங்கள் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் மட்டும், தினமும் இடைவெளியின்றி தொடர்ச்சியாக 5 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இது எங்களை மிகவும் பாதித்துள்ளது. எங்கள் வகுப்பில் படிக்கும் ஒரு சிலரைத் தவிர, மற்ற அனைவரும் நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எங்களிடம் தொடர்ந்து 5 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க வசதியான செல்போன்கள் இல்லை. இருக்கும் செல்போன்கள் தொடர்ந்து 5 மணி நேரம் சார்ஜ் நிற்பதில்லை. சார்ஜ் போட்டபடி ஆன்லைன் வகுப்பை கவனிப்பது, செல்போன்கள் வெடிக்கும் அபாயம் கொண்டது. ஆகவே, புதிய விலையுயர்ந்த செல்போன்கள் வாங்குவதற்கான வசதியும் எங்களுக்கு இல்லை. தினம் 5 மணி நேரம் ஆன்லைன் வகுப்புக்குத் தேவையான இன்டர்நெட் டேட்டாவிற்கான பணச் செலவும் அதிகமாக உள்ளது.

5 மணி நேரம் ஆன்லைன் வகுப்பு… மன அழுத்தம்… தடுத்து நிறுத்துங்கள் !-முதல்வர் பழனிசாமிக்கு மாணவர்கள் அனுப்பிய கடிதம்

கிராமப்புற மாணவர்களுக்கு சரிவர இண்டர்நெட் சிக்னலும் கிடைப்பதில்லை. தினம் 5 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பது, எங்களை உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கிறது. மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இரவில் தூக்கம் வருவதில்லை. தூங்கினாலும், ஆன்லைன் வகுப்பில் இருப்பது போன்ற மனப்பிரமையுடனே தூங்க வேண்டியுள்ளது. வகுப்பறையில் நேரடியாக பாடங்களை கவனிப்பது போன்றதல்ல, ஆன்லைனில் பாடங்களை கவனிப்பது. வீட்டிற்குள் இருந்தபடி, தினம் 5 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பது, குடும்பச் சூழலால் பாதிக்கப்படுகிறது. பாடங்களை சரிவர கற்க முடிவதில்லை.

வகுப்பறையில் நேரடியாக பாடங்களை கற்பதில் ஒரு இயற்கையான, இயல்பான தன்மையுள்ளது. ஆனால், ஆன்லைன் வகுப்புகளில் அப்படி இல்லை என்பதை எங்கள் ஆசிரியர்கள் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் எங்களுடைய சிரமங்களை, எங்கள் துறையில் தெரிவித்தோம். அவர்கள் எங்கள் கோரிக்கையை பரிசீலிக்கவில்லை. கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தோம். அவர்களும் எங்கள் கோரிக்கையை பரிசீலிக்கவில்லை.
அந்த சூழ்நிலையில், எங்கள் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, கடந்த சில நாட்களாக ஆன்லைன் வகுப்புகளை புறக்கணித்து வருகிறோம். அதன் பின்பும், எங்கள் கோரிக்கையை கல்லூரி நிர்வாகம் பரிசீலிக்கவில்லை. அதற்கு மாறாக, இண்டர்னல் மார்க்கையும், வருகைப் பதிவையும் சுட்டிக்காட்டி, 5 மணி நேர ஆன்லைன் வகுப்பைத் தொடரும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். எனவே, நாங்கள் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அடையும் சிரமங்களைப் புரிந்துகொண்டு, இதில் தலையிட்டு, எங்களுடைய நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு வேண்டிக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர். இந்த புகார் கடிதம் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.