‘கந்துவட்டி செயலிகளிடம் சிக்கி பொதுமக்கள் தற்கொலை’ சீன செயலிகளை தடை செய்க!

 

‘கந்துவட்டி செயலிகளிடம் சிக்கி பொதுமக்கள் தற்கொலை’  சீன செயலிகளை தடை செய்க!

சீன செயலிகளை இயக்கும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் மோசடிக்கு துணையாக இருப்பவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “தமிழ்நாட்டு மக்களின் வறுமை மற்றும் நிதி நெருக்கடியை பயன்படுத்தி கடன் கொடுத்து ஏமாற்றிய சீன நிறுவனங்கள், இப்போது அதிக லாபம் தருவதாகக் கூறி ஏமாற்றத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே சீன நிறுவனங்களிடம் ஏராளமானோர் ஏமாந்துள்ள நிலையில், மற்றவர்களும் சீன நிறுவனங்களின் சதி வலையில் சிக்கி ஏமாறுவதைத் தடுக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘கந்துவட்டி செயலிகளிடம் சிக்கி பொதுமக்கள் தற்கொலை’  சீன செயலிகளை தடை செய்க!

மக்களை ஏமாற்றுவதையே பிழைப்பாகக் கொண்ட நிறுவனங்கள் புதுப்புது வடிவங்களில் மக்களை ஏமாற்றி வருகின்றன. அந்த வகையில் சில சீன நிறுவனங்கள், இந்தியாவில் நிழல் நிறுவனங்களைத் தொடங்கி, அதன் செயலிகள் மூலம் முதலீடுகளுக்கு அதிக லாபம் தருவதாக ஆசைகாட்டி ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. பவர் பேங்க் ஆப், டெஸ்லா பவர் பேங்க் ஆப் என்ற பெயரில் செயல்பட்டு வரும் செயலிகள் வழியாக பணத்தை முதலீடு செய்த சென்னையைச் சேர்ந்த 37 பேர் மொத்த முதலீட்டையும் இழந்து தவிக்கின்றனர். தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் இதே போல் பலர் ஏமாந்திருக்கின்றனர்.

சீனாவைச் சேர்ந்த பல நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள பட்டயக் கணக்காளர்களின் துணையுடன் நிழல் நிறுவனங்களையும், அவற்றின் பெயரில் வங்கிக் கணக்குகளையும் தொடங்குகின்றன. அந்த நிறுவனங்களின் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் பணியாளர்கள், வங்கிக் கணக்குகளில் அதிகமாக பணம் வைத்திருப்போரின் விவரங்களை உத்தேசமாகத் திரட்டி அவர்களை தொலைபேசியில் அழைப்பர். தங்களின் வங்கிச் செயலிகள் மூலம் முதலீடு செய்தால், குறைந்த காலத்தில் அது இரட்டிப்பாகிவிடும் என்று ஆசை காட்டுவார்கள். அதை நம்பி சிலர் மிகச்சிறிய அளவில் முதலீடு செய்வார்கள். அவ்வாறு செய்யப்படும் முதலீடுகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இரட்டிப்புத் தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்கும். அதனால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செயலிகள் மீது நம்பிக்கை வைக்கும் வாடிக்கையாளர்கள் அதிக தொகையை முதலீடு செய்வர்; அவர்களின் ஆலோசனைப்படி அவர்களுக்குத் தெரிந்தவர்களும், நண்பர்களும் சம்பந்தப்பட்ட செயலிகள் மூலம் முதலீடு செய்வர். ஆனால், பெரிய தொகையை முதலீடு செய்தவுடன், அந்த பணத்தை வேறு கணக்குக்கு மாற்றும் நிறுவனங்கள், முதலீடு செய்தவர்களின் கணக்குகளை முடக்கி விடுகின்றன. இந்த முறையில் பலர் ஏமாந்திருக்கின்றனர்.

‘கந்துவட்டி செயலிகளிடம் சிக்கி பொதுமக்கள் தற்கொலை’  சீன செயலிகளை தடை செய்க!

வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்கான இந்த நடைமுறை காலம் காலமாக இருப்பது தான். இதுவரை ஆடம்பரமான அலுவலகம் அமைத்து, பரிசுப் பொருட்களைக் கொடுத்து, கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தை அறிவித்து முதலீட்டாளர்களை ஏமாற்றும் வேலையை உள்ளூர் நிறுவனங்கள் செய்து வந்தன. சீன நிறுவனங்களோ, இப்போது உயர்தொழில்நுட்பத்துடன் செயலிகள் மூலம் மக்களை ஏமாற்றுகின்றன. இவ்வாறு ஏமாற்றும் நிறுவனங்களுக்கு எந்த அடையாளமும், கைப்பற்றக்கூடிய அளவில் சொத்துகளும் இல்லை என்பதால் சீன செயலிகளிடம் இழந்த பணத்தை மீட்பது என்பது குதிரைக் கொம்பு தான்.

கடந்த ஆண்டில் சீன நிறுவனங்கள் கந்து வட்டி செயலிகளை உருவாக்கி, தமிழ்நாட்டில் ஏராளமான வாடிக்கையாளர்களை அழைத்து அழைத்து கடன் கொடுத்தன. குறித்த காலத்திற்குள் கந்து வட்டியுடன் கடனை திரும்பச் செலுத்தவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தொலைபேசியில் அழைத்து அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டுவதை சீன செயலிகள் வழக்கமாகக் கொண்டிருந்தன. அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ரூ.5,000 கடன் வாங்கிய பலரும் கூட தற்கொலை செய்து கொண்ட அவலம் தமிழ்நாட்டில் நடைபெற்றது. அதை கடந்த ஆண்டு நான் தான் அம்பலத்துக்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினேன். அதன்பிறகு தான் சீனத்தைச் சேர்ந்த சிலரும், அவர்களுக்கு உதவியாக இருந்த இந்தியர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர் தான் கந்துவட்டி செயலிகளிடம் சிக்கி பொதுமக்கள் தற்கொலை செய்து கொள்வது முடிவுக்கு வந்தது.

‘கந்துவட்டி செயலிகளிடம் சிக்கி பொதுமக்கள் தற்கொலை’  சீன செயலிகளை தடை செய்க!

இப்போதும் கூட சீன செயலிகளில் முதலீடு செய்பவர்கள் பணத்தை இழப்பது தடுக்கப்படாவிட்டால், பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் ஏற்படும். அதற்கு முன்பாக தமிழக அரசும், காவல்துறையும் அதிரடி நடவடிக்கை எடுத்து மக்களையும், அவர்களின் பணத்தையும் காப்பாற்ற வேண்டும். சீன செயலிகளில் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறுவது சாத்தியமற்ற செயலாகும். மக்களின் பணத்தை ஆசை காட்டி பறித்து ஏமாற்றும் சீன நிறுவனங்களின் செயலிகளை தடை செய்வது மட்டும் தான் இதற்கு ஒரே தீர்வாகும். அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நிறைவடையும் வரை, சீன செயலிகளிடம் ஏமாறாமல் இருப்பதற்காக மக்களிடம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

எனவே, முதலீடு செய்த தொகையை விட இரு மடங்கு லாபம் தருவதாகக் கூறி ஏமாற்றும் சீன செயலிகளில் முதலீடு செய்ய வேண்டாம் என்று அனைத்து ஊடகங்கள் மூலமாகவும் தமிழக மக்களுக்கு அரசும், காவல்துறையும் அறிவுறுத்த வேண்டும். சீன செயலிகளை இயக்கும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் மோசடிக்கு துணையாக இருப்பவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்; மோசடி செய்யும் சீன செயலிகளையும், நிறுவனங்களையும் தடை செய்ய வேண்டும் ” என்று கூறியுள்ளார்.