பக்ரீத் பண்டிகை… அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

 

பக்ரீத் பண்டிகை… அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈதுல் அல்ஹா என்னும் ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று உலகெங்கும் உவப்புடன் கொண்டாடப்படுகின்றது. தன் ஒரே பிள்ளை என்றும் பாராமல் மூன்று முறை கனவில் கண்டதையே இறைவனின் கட்டளை என்று கருதி, தள்ளாத வயதில் பெற்றெடுத்த இஸ்மாயிலை, நபி இப்ராகீம் (அலை) பலியிட முன்வந்த தியாகம் இன்றவும் உலகெங்கும் நினைவுகூரப்படுகின்றது. இந்த நிகழ்வு இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனையாக நடைபெற்றது ஆகும்.

நிறம், சாதி, மொழி, இனம், தேசம் என்ற வரம்புகளைத் தகர்த்து, ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்ற உணர்வுடன், அரபா பெருவழியில் மானுட சமுத்திரமாக மக்கள் சங்கமித்து, வழக்க வழிபாடுகளில் திளைத்திருக்கும் மகோன்னதம் இன்று அரங்கேறுகிறது; ஈகை உணர்வால், வையகத்தை அய்யமின்றி வாகை சூடலாம் என்று அறிவிக்கின்றது.

பக்ரீத் பண்டிகை… அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுபூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், இந்நாளில் சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.

பக்ரீத் பண்டிகை… அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

மதச்சார்பின்மைதான் இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்கின்ற அரணாகும். அதனைத் தகர்பதற்கு அராஜக சக்திகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசே பக்க பலமாகச் செயல்படுவது இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, விபரிதமான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே மதச் சார்பின்மையைக் காக்கவும், சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் அனைவரும் உறுதிகொள்வோம்.

இந்த உணர்வையும், உறவையும் மேலும் செழித்தோங்கச் செய்யச் சூளுரைத்து, இஸ்லாமியப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பக்ரீத் பண்டிகை… அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

பாமக நிறுவனர் ராமதாஸ், “மனிதநேயத்தை வலியுறுத்தும் திருநாளான பக்ரித் திருநாளை உலகம் முழுவதும் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமியர்களின் ஐந்து புனிதக்கடமைகளில் ஒன்று மெக்கா நகருக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது ஆகும். இக்கடமையின் ஓர் அங்கமாக ஹஜ் மாதம் 10&ஆம் நாள் சிறப்புத் தொழுகை நடத்தி, அதன் முடிவில் இறைவனுக்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதை இஸ்லாமிய மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கான நடைமுறைகளில் பல பாடங்கள் அடங்கியுள்ளன.

பக்ரித் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. அந்த வகையில் இது மனிதநேயத் திருவிழாவும் ஆகும்.

இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இத்திருவிழா நினைவூட்டுகிறது. இறைபக்தியையும் கடந்து இந்தத் திருநாள் வலியுறுத்தும் செய்தி இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்; அண்டை வீட்டாருடன் நல்லுறவை பாராட்ட வேண்டும் என்பதாகும். அதற்காகத் தான் ஆடு, மாடு ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதன் மூலம் கிடைக்கும் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பக்ரித் வலியுறுத்துகிறது. இது அற்புதமான பாடமாகும்.

இந்தப் பாடத்தை புரிந்து நடந்தாலே உலகில் அமைதியும், சகோதரத்துவமும் தழைக்கும். அதன்படி அன்பு, நல்லிணக்கம், ஈகை, மாற்றுத்திறனாளிகள் மீதான அக்கறை என்றும் நீடிக்க வேண்டும்; நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லா நலமும், வளமும் கிடைக்க வேண்டும் என மீண்டும் வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

பக்ரீத் பண்டிகை… அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

அதேபோல் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, “தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமிய இறைதூதர்களில் ஒருவரான இப்ராகிம் நெடுநாட்களுக்கு பிறகு தமக்கு பிறந்த மகன் இஸ்மாயிலை கனவில் கிடைத்த இறைவனின் கட்டளையை மதித்து உயிர்ப்பலி கொடுக்கத் துணிந்தார். தமக்காக மகனையே தியாகம் செய்யத் துணிந்த இறைதூதரை எண்ணி வியந்த இறைவன், உடனடியாக வானவரை அனுப்பி இஸ்மாயில் பலிகொடுக்கப்படும் நிகழ்வை தடுத்து நிறுத்தியதுடன், அதற்குப் பதிலாக ஆட்டைக் கொடுத்து பலியிடும்படி கேட்டுக் கொண்டார். இறைதூதர் இப்ராகிமின் தியாக உள்ளத்தைப் பாராட்டும் விதமாகவே உலகம் முழுவதும் பக்ரீத் கொண்டாடப்பட்டு வருகிறது. இது திருவிழா மட்டுமல்ல… இறைபக்தியை நினைவூட்டும் நாளும் கூட.

இஸ்லாமியர்கள் அனைவருமே இறைபக்தியில் மட்டுமின்றி, ஈகையிலும், தியாகத்திலும் இணையற்று திகழ்கின்றனர். தியாகத் திருநாள் என்று போற்றப்படும் பக்ரித் திருநாளில் இஸ்லாமியர்கள் அனைவரும் தங்களிடத்தில் இருப்பதில் ஒரு பகுதியை இல்லாத பிறருக்கு ஈந்து தங்களின் ஈகை குணத்தையும், மனிதநேயத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். அது தான் இஸ்லாத் கற்றுக் கொடுத்த பாடம் ஆகும்.

உலகில் எந்த மதத்தின் திருநாளாக இருந்தாலும் அது மக்களுக்கு போதிப்பது அன்பு செலுத்துங்கள்; இல்லாதவர்களுக்கு உதவுங்கள் என்ற செய்தியைத் தான். இன்னும் கேட்டால் இல்லாதவர்களுக்கு எதாவது கிடைக்க வேண்டும் என்பது திருநாள்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கங்களின் ஒன்றாகும். பக்ரித் திருநாள் உருவாக்கப்பட்டதன் நோக்கங்களில் ஒன்றும் இல்லாதவர்களுக்கு உதவுவது தான்.

உலகில் எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டால், இல்லாமை என்பதே இருக்காது. அத்தகைய நிலை ஏற்பட வேண்டும்; அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், மகிழ்ச்சி, வளம் உள்ளிட்ட அனைத்தும் தழைத்தோங்க வேண்டும் என்று கூறி, அத்தகைய நிலையை உருவாக்குவதற்கு உழைக்க இந்த நன்னாளில் சபதம் ஏற்போம்” என்று வாழ்த்து கூறியுள்ளார்.