சென்னையில் இருந்து திரும்பிய அசாம் இளைஞர் – 14 நாட்கள் மர வீட்டில் தனியாக இருக்க கிராமத்தினர் உத்தரவு

 

சென்னையில் இருந்து திரும்பிய அசாம் இளைஞர் – 14 நாட்கள் மர வீட்டில் தனியாக இருக்க கிராமத்தினர் உத்தரவு

சோனித்பூர்: சென்னையில் இருந்து திரும்பிய அசாம் இளைஞரை மரவீட்டில் தனிமையில் இருக்க அவரது கிராமத்தினர் உத்தரவிட்டுள்ளனர்.

அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அமோஷ் பசுமாதரி என்ற இளைஞர் (வயது 21). இவர் சென்னையில் கார் இருக்கை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த நிறுவனம் மூடப்பட்டது. இதனால் அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவர்கள் வேலை இல்லாததால் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அந்த வகையில், அமோஷ் பசுமாதரியும் அசாமில் உள்ள தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு கடந்த மே மாதம் 26-ஆம் தேதி கிராமத்தை அடைந்தார்.

அவர் சென்னையில் இருந்து வந்திருப்பதை அறிந்த அவரது கிராம மக்கள் அவரை ஒரு மரவீட்டில் 14 நாட்கள் தனிமையில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதை ஏற்றுக் கொண்ட அமோஷ் பசுமாதரி தற்போது மரவீட்டில் தனிமையில் இருந்து வருகிறார்.

இதுவரை நான்கு இரவுகளை அந்த மரவீட்டில் அமோஷ் பசுமாதரி கழித்துள்ளார். இன்னும் 10 நாட்கள் அவர் அங்கு தங்கியிருக்க வேண்டும். அந்த மரவீடு சாதாரண வீட்டைப் போல வசதியாக இல்லை என்றாலும், கிராமவாசிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு 10 நாட்கள் இருக்க உள்ளதாக அவர் கூறினார். அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பலத்த மழை பெய்யும் சமயங்களில் பிளாஸ்டிக் தாளால் அந்த மரவீடு மூடப்படும். ஆனால் ஆங்காங்கே மழை நீர் ஒழுகும் என்று கூறப்படுகிறது. அமோஷ் பசுமாதரிக்கு அந்த கிராம மக்கள் 20 கிலோ அரிசி வழங்கியுள்ளனர். ஆனால் சரியான உணவைத் தயாரிக்க அவருக்கு வேறு எந்த மூலப்பொருளும் கொடுக்கப்படாததால் அவர் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்.