கிரேட் எஸ்கேப்… டிராவில் முடிந்த சிட்னி டெஸ்ட்!

 

கிரேட் எஸ்கேப்… டிராவில் முடிந்த சிட்னி டெஸ்ட்!

சிட்னியில் நடைபெற்ற இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் – விஹாரி ஜோடி போராடி டிராவில் முடித்தது.

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 3ஆவது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஸ்மித்தின் சதத்தால் 338 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த இந்திய அணியில் கில், புஜாரா தவிர்த்து யாரும் சிறப்பாக ஆடவில்லை. இதனால் 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

கிரேட் எஸ்கேப்… டிராவில் முடிந்த சிட்னி டெஸ்ட்!

94 ரன்கள் முன்னிலையில் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் வழக்கம் போல ஸ்மித், லபுசானேவின் ஆட்டத்தால் வலுவான நிலையில் இருந்தது. கூடவே கேமரூன் கிரினும் தன் பங்கிற்கு 84 ரன்களை அதிரடியாகக் குவிக்க 407 ரன்கள் இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மிகக் கடினமான இலக்கைத் துரத்திய இந்திய அணியின் தொடக்கவீரர் கில் 31 ரன்களில் வெளியேறினார். ரோஹித் சர்மா அரைசதம் அடித்து வெளியேறினார். தொடர்ந்து கேப்டன் ரஹானேவும் நடையைக் கட்ட இந்தியா பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்த இக்கட்டான சூழலில் களமிறங்கிய பண்ட் புஜாராவுடன் கைகோர்த்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விரைவாக விக்கெட்டை வீழ்த்தி விடலாம் என்ற ஆஸி. வீரர்களின் மனக்கணக்கை இருவரும் தகர்த்தெறிந்தனர்.

கிரேட் எஸ்கேப்… டிராவில் முடிந்த சிட்னி டெஸ்ட்!

இச்சூழலில் பண்ட் 97 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை நழுவவிட்டார். தொடர்ந்து புஜாராவும் 77 ரன்களில் பெவிலியன் திரும்ப, மறுபடியும் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது இந்திய அணி. இவ்வேளையில் இணைந்த விஹாரியும் அஸ்வினும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை விடாமல் ஆடினர்.

ஒரு கட்டத்தில் விஹாரி ஆஸ்திரேலிய பவுலர்களை நோகடித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். 100 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 7 ரன்களை மட்டும் எடுத்து மிரட்டிவிட்டார் (டெஸ்ட் போட்டியின் ஆன்மாவே இதில் தானே அடங்கியிருக்கிறது). மறுபுறம் அஸ்வின் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசிக்கொண்டிருந்தார்.

கிரேட் எஸ்கேப்… டிராவில் முடிந்த சிட்னி டெஸ்ட்!

இந்தியா போராடி வெற்றிபெற்றுவிடும் என்ற நிலைக்கு இருவரும் ஆட்டத்தை எடுத்துச் சென்றனர். இருப்பினும், இருவரும் விக்கெட் விடாமல் ஆடியதையடுத்து 334 ரன்கள் எடுத்து ஆட்டத்தை ஒருவழியாக டிரா செய்தது. தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை மீட்டெடுத்து மறக்க முடியாத இன்னிங்ஸை ஆடியிருக்கிறார்கள் அஸ்வினும் விஹாரியும். இது ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த வெற்றிகரமான தோல்வி!