“வணக்கம்டா மாப்ள கப்பாவுல இருந்து…” – டிம் பெய்ன்னை கலாய்த்த அஸ்வின்!

 

“வணக்கம்டா மாப்ள கப்பாவுல இருந்து…” – டிம் பெய்ன்னை கலாய்த்த அஸ்வின்!

ஆஸ்திரேலிய அணியை ஆஸ்திரேலிய மண்ணிலேயெ வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றிருக்கிறது இந்திய அணி. சீனியர் பிளேயர்கள் எல்லாம் வெளியேற கிட்டத்தட்ட இந்தியாவின் ஏ அணியை வைத்தே மண்ணைக் கவ்வ வைத்திருக்கிறது. பார்டர்-கவாஸ்கர் கோப்பையை ஒன்பதாவது முறையாக முத்தமிட்டிருக்கிறது.

இத்தொடரின் மூன்றாவது போட்டியில் கேப்டன் டிம் பெய்ன், அஸ்வினை ஆட்டமிழக்கச் செய்ய அவரை ஸ்லெட்ஜ் செய்துகொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் அசிங்கமான வார்த்தைகளைப் போட்டு திட்டியும் விட்டார். பின்னர் மனம் வருந்தி அவர் மன்னிப்பு கேட்டது வேறு கதை.

“வணக்கம்டா மாப்ள கப்பாவுல இருந்து…” – டிம் பெய்ன்னை கலாய்த்த அஸ்வின்!

அவ்வாறு ஸ்லெட்ஜ் செய்யும்போது, “அஸ்வின் சீக்கிரம் அவுட்டாகு. உன்னை கப்பா (பிரிஸ்பேன்) மைதானத்துக்கு அழைத்துச் செல்ல நேரமில்லை” என்று நக்கலடித்தார். அதற்கு அப்போதே அஸ்வின் பதிலடியும் கொடுத்தார். “நீ இந்தியாவுக்கு வா.. அது தான் உன்னோட கடைசி சீரிஸா இருக்கும்” என அஸ்வின் கூறினார்.

டிம் பெய்ன் கூறியதற்கான காரணம் கடந்த 31 வருடங்களாக பிரிஸ்பேனில் எந்த அணியும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில்லை. அந்த அகங்காரத்தில் தான் அவர் அப்படி கூறினார். ஆனால், இன்றோ அங்கேயே இந்திய அணி ஆஸ்திரேலியாவை சம்பவம் செய்துவிட்டது.

இதைக் கலாய்க்கும் விதமாக அஸ்வின் பெய்ன்னை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார். அதில், “கப்பாவிலிருந்து மாலை வணக்கம் (வணக்கம்டா மாப்ள டோனில் படித்துக் கொள்ளவும்). கப்பாவில் என்னால் விளையாட முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.

இருந்தாலும், கடினமான காலங்களில் எங்களை வழிநடத்தி, கடினமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் எங்கள் வாழ்நாளில் இந்த சீரிஸை மறக்கவே மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா கடினமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக அஸ்வின் கூறுவது சர்காஸ்டிக்கான ஒன்று. கப்பாவில் ஆஸ்திரேலியா மிகவும் மோசமாக தோற்றுள்ளது. அதனை நக்கல் செய்யும் விதமாக அஸ்வின் அப்படி குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, மற்றொரு ட்வீட்டில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களை வம்புக்கிழுத்துள்ளார் அஸ்வின். முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா படுமோசமாக தோற்றதும் ரிக்கி பாண்டிங், மைக்கேல் வாஹன், கிளார்க் உள்ளிட்டோர் இந்தியா 0-4 என்ற கணக்கில் தொடரை இழந்துவிடும் என நக்கல் தொனியில் ஆருடம் கூறியிருந்தார்கள்.

அவர்களின் கருத்து ஒருபுறமாகவும், கோப்பையை வென்ற இந்திய அணியின் புகைப்படத்தை மறுபுறமாகவும் சேர்த்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “LHS (not =) RHS. இந்தியாவைப் பற்றி தவறான கணக்கு போட்டு விட்டீர்கள். 0-4 என்ற கணக்கில் தோற்போம் என்றீர்கள்.

ஆனால் இன்று நாங்கள் சாம்பியன். கடந்த நான்கு வாரங்களாக ஆஸ்திரேலியாவில் எங்களுக்கு கிடைத்த அன்பைக்கும் ஆதரவுக்கும் தலைவணங்குகிறோம்” என்று நக்கலாகக் கூறியுள்ளார்.

கடந்த நான்கு வாரங்களாக ஆஸ்திரேலிய வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் இந்திய வீரர்களை மிகவும் காயப்படுத்தும் விதமாகவே பேசிவந்தனர். அந்நாட்டு ரசிகர்கள் இனவெறியோடு இந்திய வீரர்களை வசைச் சொற்களால் திட்டினர். இதனைக் கலாய்க்கும் விதமாக அஸ்வினின் பதிவு உள்ளது.