செங்கோட்டை வன்முறைக்கு விவசாயிகள் காரணம் அல்ல…. மத்திய அரசுதான்.. அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

 

செங்கோட்டை வன்முறைக்கு விவசாயிகள் காரணம் அல்ல…. மத்திய அரசுதான்.. அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி செங்கோட்டை வன்முறை சம்பவத்துக்கு விவசாயிகள் காரணம் அல்ல, அது மத்திய அரசின் சதி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் பல எல்லைகளில் 3 மாதத்துக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி 26ம் தேதியன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அந்த பேரணியின்போது பெரும் வன்முறை ஏற்பட்டது. மேலும் டெல்லியின் செங்கோட்டையில் போலீஸ் தடுப்பை மீறி நுழைந்த போராட்டக்காரர்கள் தங்களது அமைப்பு கொடியை ஏற்றினர்.

செங்கோட்டை வன்முறைக்கு விவசாயிகள் காரணம் அல்ல…. மத்திய அரசுதான்.. அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)

இந்த சூழ்நிலையில் மீரட்டில் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி செங்கோட்டை சம்பவம் மத்திய அரசின் சதி என்று தெரிவித்துள்ளார். அந்த கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் பேசுகையில் கூறியதாவது: செங்கோட்டை வன்முறையின் பின்னணியில் மத்திய அரசு உள்ளது. டெல்லி சாலைகளை தெரியாத விவசாயிகளை மத்திய அரசு தவறாக வழி நடத்தியது. டெல்லி யூனியன் பிரதேசத்தின் முதல்வர் நான் என்பதால், விவசாயிகளின் டிராக்டர் பேரணி மேற்கொண்ட நாளில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும்.

செங்கோட்டை வன்முறைக்கு விவசாயிகள் காரணம் அல்ல…. மத்திய அரசுதான்.. அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் (கோப்புப்படம்)

நம் நாட்டின் விவசாயிகள் மகிழ்ச்சி அற்றவர்கள். 90 நாட்களுக்கும் மேலாக அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் டெல்லி அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காலத்தில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். ஆனால் மத்திய அரசு இது குறித்து எதுவும் செய்யவில்லை. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கூட சந்திக்காத அட்டூழியங்களை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்கொண்டனர். இப்போது போராட்டக்காரர்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நம் விவசாயிகள் எப்படி துரோகிகளாக இருக்க முடியும். ஆனால் அவர்கள் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.