2022ல் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி.. கெஜ்ரிவால் அறிவிப்பு

 

2022ல் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி.. கெஜ்ரிவால் அறிவிப்பு

2022ல் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து, இளைஞர்களை தன் வசப்படுத்திய அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார். டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தற்போது மற்ற மாநிலங்களிலும் தன்னை விரிவுப்படுத்த தொடங்கியுள்ளது. பஞ்சாபில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. கோவாவில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி முதல் முறையாக வெற்றியை பதிவு செய்தது.

2022ல் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி.. கெஜ்ரிவால் அறிவிப்பு
ஆம் ஆத்மி

தற்போது குஜராத்திலும் ஆம் ஆத்மி கட்சி களம் இறங்க உள்ளது. 2022ல் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: டெல்லியில் மின்சாரம் இலவசமாக இருக்கும்போது, இங்கு (குஜராத்) ஏன் முடியாது என்பதை மக்கள் யோசிக்க வேண்டும். அதேபோல் கடந்த 70 ஆண்டுகளில் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளின் நிலையில் ஏன் முன்னேற்றம் ஏற்படவில்லை.

2022ல் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி.. கெஜ்ரிவால் அறிவிப்பு
மின்சாரம்

குஜராத் விரைவில் மாறும். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 182 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும். டெல்லி மாடல் நிர்வாகத்தை இங்கு கொண்டு வர மாட்டோம். ஒவ்வொரு மாநிலமும் தனது சொந்த பிரச்சினைகளை கொண்டுள்ளன மற்றும் அதற்கேற்ப தீர்வுகள் உள்ளன. குஜராத் மக்கள் தங்களது சொந்த வளர்ச்சி மாடலை தேர்ந்தெடுப்பார்கள். இந்த மாநிலத்தில் மக்களுக்கு பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு எதிரான வாய்ப்பாக ஆம் ஆத்மி வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.