எய்ட்ஸ் வைரஸ் வளர்ச்சியைத் தடுக்கும் என்சைமை கண்டுபிடித்த பெங்களூரு ஐஐஎஸ் ஆய்வாளர்கள்!

 

எய்ட்ஸ் வைரஸ் வளர்ச்சியைத் தடுக்கும் என்சைமை கண்டுபிடித்த பெங்களூரு ஐஐஎஸ் ஆய்வாளர்கள்!

எச்.ஐ.வி எய்ட்ஸ் கிருமியின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் செயற்கை நொதி (என்சைம்) ஒன்றைக் கண்டறிந்துள்ளதாகப் பெங்களூரு ஐஐஎஸ் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். இயற்கையான என்சைம் போலவே செயல்படும் இது வைரஸ் கிருமியின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.

எய்ட்ஸ் வைரஸ் வளர்ச்சியைத் தடுக்கும் என்சைமை கண்டுபிடித்த பெங்களூரு ஐஐஎஸ் ஆய்வாளர்கள்!

மனித குலத்தின் அச்சுறுத்தலாக எச்.ஐ.வி எய்ட்ஸ் வைரஸ் கிருமி பார்க்கப்பட்டது. எப்போது கொரோனா வைரஸ் தன்னுடைய ஆட்டத்தைக் காட்ட ஆரம்பித்ததோ அனைத்து நாடுகளும் விஞ்ஞானிகளும் கொரோனா வைரஸ் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பிவிட்டனர்.

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமான ஐஐஎஸ் எச்.ஐ.வி-யின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் செயற்கை என்சைமை தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது. மனித நோய் எதிர்ப்பு செல்களை ஆக்கிரமிப்பு செய்து வசிக்கும் எச்ஐவி செல்களை இது தடுத்து நிறுத்தி அதன் பெருக்கத்தைத் தடுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய நேனோ என்சைம் இயற்கையான என்சைம் போல செயல்படும். ஆக்சிடேட்டிவ் ஸ்டிரெஸ் அளவைக் குறைக்கும்.

இது குறித்து ஐஐஎஸ் பேராசிரியர் கோவிந்தசாமி முகேஷ் கூறுகையில், “நானோ என்சைம் உயிரியல் அமைப்பில் முற்றிலும் நிலையானதாக இருப்பதால் கூடுதல் நன்மைகள் கொண்டதாக உள்ளது. இது உயிரணுக்களில் எந்தவிதமான எதிர்விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை” என்றார்.

நோயாளியின் உடலில் இருந்து எச்.ஐ.வி வைரஸை முற்றிலுமான அகற்றுவது என்பது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை. தற்போது உலகம் முழுக்க உள்ள பல எச்ஐவி மருந்துகள் வைரஸ் பெருக்கம் மற்றும் பரவலைத் தடுத்து நிறுத்தும் வகையில் உள்ளன. எச்.ஐ.வி வைரஸ் மறைந்து வாழும் நிலையில் உள்ளது. இதை அழிக்க அதிக ஆற்றல் கொண்ட நச்சுக்களான ஹைட்ரஜன் பெராக்ஸைடு போன்றவற்றை செலுத்துவது பாதுகாப்பாக இருக்காது. அது ஆக்சிடேட்டிவ் ஸ்டிரெஸ்ஸை அதிகரிக்கச் செய்துவிடும். அதே நேரத்தில் வைரஸ் செல்லை மீண்டும் செயல்படவும் அனுமதித்துவிடும்.

ஆனால், இந்த நேனோ என்சைம்கள் நல்ல செல்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது ஆய்வக முடிவுகளில் தெரியவந்துள்ளது. உடலுக்குள் நுழைந்தால் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. தொடர்ந்து இந்த என்சைமை வைத்து ஆய்வு செய்யப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.