ஆடல் வல்லானுக்கு புரட்டாசி சதுர்த்தசியில் அர்த்தஜாம பூஜை!

 

ஆடல் வல்லானுக்கு புரட்டாசி சதுர்த்தசியில் அர்த்தஜாம பூஜை!

சிவபெருமானின் 64 திருவடிவங்களில் ஒன்று நடராஜ பெருமான். சிவன் அபிஷேகப் பிரியர் என்றாலும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறுமுறை மட்டுமே அபிஷேகம் நிகழும்.
அப்படி நிகழும் அபிஷேகங்களில் புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி அபிஷேகம் சிறப்புவாய்ந்தது. தலைமைச் செயலகமாகத் திகழும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சதுர்த்தசி அபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

ஐந்தெழுத்தாகிய நமசிவய என்பது வரிசை மாற்றத்தின்படி 120 வகைகளில் எழுதலாம். அந்த 120 வகைகளும் சிவனின் ஒவ்வொரு அங்கங்களைக் குறிப்பதாக அமைந்துள்ளது. உதாரணமாக, நயவமசி நாவின் அடிப்பகுதி, யவநமசி மூச்சு இப்படியாக 120 அங்கங்களின் சேர்க்கையாக நடராஜர் உருவம் அமைக்கப்படுகிறது.

ஆடல் வல்லானுக்கு புரட்டாசி சதுர்த்தசியில் அர்த்தஜாம பூஜை!

ஆடல் வல்லானாகிய நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை சிறப்பு மஹா அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகம விதிகள் கூறுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இந்த ஆறு நாட்களில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படும்.

ஓயாமல் ஆடிக்கொண்டிருக்கும் நடராஜப் பெருமானைக் குளிர்விக்க தேவாதி தேவர்கள் மார்கழி திருவாதிரையில் அருணோதயகாலப் பூஜையும், மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திபூஜையும், சித்திரை திருவோணத்தில் நண்பகல் பூஜையும், ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜையும், ஆவணி வளர்பிறை சதுர்த்தி மற்றும் புரட்டாசி வளர்பிறை சதுர்த்திகளில் அர்த்தஜாம பூஜை என ஆறுகால பூஜையை நடராஜப் பெருமானுக்கு தேவர்கள் செய்கிறார்கள் என்பது ஐதீகம்.

ஆடல் வல்லானுக்கு புரட்டாசி சதுர்த்தசியில் அர்த்தஜாம பூஜை!

மனிதர்களுக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். ஆறுகால பூஜையைத் தேவர்கள் நாள்தோறும் செய்துவருகிறார்கள் என்பது ஐதீகம். இதன் அடிப்படையிலேயே பூவுலகிலும் செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், சிவன் கோயில்களில் ஆண்டுக்கு ஆறு முறை நடராஜர் அபிஷேகம் நடக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு ஒவ்வோர் ஆண்டும் ஆறு மகா அபிஷேகங்கள் நடைபெறும். சித்திரை மாதத் திருவோணம், ஆனி மாத உத்திரம், மார்கழி மாதத் திருவாதிரை ஆகிய நட்சத்திர நாள்களிலும், ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் மகா அபிஷேகங்கள் நடைபெறும். நடராஜரின் ஆனந்த தாண்டவத்தால்தான் இந்தப் பிரபஞ்சம் மற்றும் சகல ஜீவன்களும் தோன்றின என்கின்றன புராணங்கள்.

ஆடல் வல்லானுக்கு புரட்டாசி சதுர்த்தசியில் அர்த்தஜாம பூஜை!

மகாஅபிஷேகத்தின்போது தீர்த்தம் மட்டுமன்றி பால், சந்தனம், விபூதி, தேன், பஞ்சாமிர்தம், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர் எனப் பலவித அபிஷேகப் பொருள்களும் வழக்கத்தைவிட அதிக அளவில் அபிஷேகம் நடத்தப்படும். புரட்டாசி மாதத்தில் பூர்வபட்ச சதுர்த்தசியில், சிதம்பர நடராஜ கோயிலில் உள்ள கனக சபையில், மாலையில் அபிஷேகம் நடைபெறும். சிதம்பரம் நடராஜரை ஒரு மனிதன் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்கும் பட்சத்தில் முக்தி அடைவான் என்பது நம்முன்னோர்கள் சொன்னவழி. பக்தர்கள் தாங்கள் பிறந்த நாளிலோ, பிறந்த நட்சத்திரத்திலோ நடராஜ பெருமானை வழிபடுவது சிறப்பானதாகும். ஓம் நமசிவாய!