தமிழகத்துக்கு 5 புயல்கள் வரிசையாக உருவாகிறதா?

 

தமிழகத்துக்கு 5 புயல்கள் வரிசையாக உருவாகிறதா?

வங்கக்கடலில் உருவான நிவர், புரெவி புயல்களுக்குப் பிறகு, தமிழகத்தில் அடுத்தடுத்து ஐந்து புயல்கள் உருவாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதன்படி டெளட்கோ புயல் டிசம்பர் 8 ஆம் தேதியும், டிசம்பர் 17 ஆம் தேதி யாஸ் என்னும் புயலும், 24 ஆம் தேதி குலாப் என்னும் புயலும், அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ஷாஹீன் என்னும் புயலும், அடுத்த ஆண்டு, ஜனவரி 08 ஆம் தேதி ஜவாத் என்னும் புயலும் உருவாவதாக சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது.

Image

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 8% அதிகமாக இதுவரை பெய்துள்ளது. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மட்டும் இயல்பை விட குறைவான மழை பெய்துள்ளது. 20 மாவட்டங்களில் சராசரியான அளவு மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் 3982 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அடுத்தடுத்து 5க்கும் மேற்பட்ட புயல் வர உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்று சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இப்படி தொடர்ந்து வெளியிட்டு வரும் பொய்யான தகவலை மக்கள் நம்பத் தேவையில்லை” எனக் கூறினார்.

இதேபோல் தவறான வதந்திகளை ஃபார்வார்டு செய்வதை நிறுத்திக்கொள்ளுமாறு தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜானும் ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.