• February
    23
    Sunday

Main Area

Main



பதறாதீங்க.... தட்டுப்பாடு இல்லாம கச்சா எண்ணெய் சப்ளை செய்வதாக சவுதி சொல்லிட்டு....

சவுதி அராம்கோ நிறுவனம்
சவுதி அராம்கோ நிறுவனம்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சவுதி அரேபியா முன்னணியில் உள்ளது. உலகிலேயே கச்சா உற்பத்தியில் மிகப்பெரிய நிறுவனமாக சவுதியின் அராம்கோ நிறுவனம் திகழ்கிறது. அராம்கோ நிறுவனத்தின் 2 உற்பத்தி ஆலைகளில் கடந்த சனிக்கிழமையன்று ஆளில்லா விமானங்கள் வாயிலாக தாக்குதல் நடந்தது. இதனால் சவுதியின் 50 சதவீத கச்சா எண்ணெய் உற்பத்தி பாதித்தது.

தாக்குதல் நடந்த அராம்கோ ஆலை

இந்த தாக்குதலால் சவுதியின் ஒரு நாள் உற்பத்தியில் 57 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் குறைந்தது. இது உலகின் கச்சா எண்ணெய் சப்ளையில் 5 சதவீதமாகும். மேலும், இந்த தாக்குதலால் போர் மற்றும் பேரிடர் போன்ற அவசர சமயங்களில் பயன்படுத்த சவுதி கூடுதலாக தனியாக வைத்திருந்த 20 லட்சம் பேரல் எண்ணெய் உற்பத்தி திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அராம்கோ ஆலை

சவுதியின் உற்பத்தி மற்றும் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளால் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஈராக்கு அடுத்தப்படியாக சவுதிதான் இந்தியாவுக்கு அதிகளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் சப்ளை செய்கிறது. தற்போதைய தாக்குதலால் அராம்கோ நிறுவனம் நமக்கு பழைய மாதிரி சப்ளை செய்யுமா என்ற அச்சம் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு எழுந்தது. மேலும், பெட்ரோல், டீசலை அடிப்படையாக கொண்டு செயல்படும் நிறுவனங்களும் கலக்கம் அடைந்தன.

பெட்ரோலிய அமைச்சகம்

இந்நிலையில் அவர்களுக்கு ஆறுதல்அளிக்கும் வகையில், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கச்சா எண்ணெய் சப்ளை செய்வதாக அராம்கோ நிறுவனம் உறுதி அளித்துள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதேசமயம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.