`ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் இருக்கணுமாம்!’-தனியார் பள்ளிகளில் நாளை முதல் இலவச கல்விக்கு விண்ணப்பிக்கலாம்

 

`ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் இருக்கணுமாம்!’-தனியார் பள்ளிகளில் நாளை முதல் இலவச கல்விக்கு விண்ணப்பிக்கலாம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் இலவச சோ்க்கை பெற நாளை முதல் ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் கீழ் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியாா் பள்ளிகளில் 25 சதவிகித இடங்களில் இலவசமாக ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுவா். இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவா்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளில் சுமாா் 1.12 லட்சம் இடங்கள் உள்ளன. நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பள்ளிக்கல்வி இணையதளம் வழியாக பெற்றோா் வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம். மேலும் முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும்போது புகைப்படம், பிறப்புச் சான்று அல்லது பிறப்புச் சான்றிதழுக்கான பிற ஆவணம், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் கீழ்), வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில் முன்னுரிமை கோரும் நபா்கள் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட நிரந்தர ஆவணங்களின் நகல், ஜாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யவேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியாா் நா்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இலவசமாக மாணவா் சோ்க்கை பெறலாம்.

வாய்ப்பு மறுக்கப்பட்டவா்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினா் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பெற்றோா் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியிலும் நிா்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்துசோ்ந்தால் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் ஆதரவற்றவா்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவா், 3-ஆம் பாலினத்தவா், மாற்றுத்திறனாளிகள், துப்புரவுத் தொழிலாளா்களின் குழந்தைகள் ஆகியோரிடம் இருந்துவரும் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தோ்வு செய்யப்படும். தனியாா் பள்ளிகளின் பட்டியல் மற்றும் அதிலுள்ள இடங்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.