அண்ணாமலையார் மகா தீபம்! – மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது மகா கொப்பரை!

 

அண்ணாமலையார் மகா தீபம்! – மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது மகா கொப்பரை!

கார்த்திகை மாதத்தில் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மகா தீப நிகழ்வு நாளை நடைபெற உள்ளது. இதற்கான கொப்பரையை கோயில் ஊழியர்கள், இன்று மலைக்கு எடுத்துச் சென்றனர். மகா தீப நிகழ்வுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக , திருவண்ணாமலை தீபம் காண, பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் அறிவித்துள்ளன.

அண்ணாமலையார் மகா தீபம்! – மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது மகா கொப்பரை!

இந்த நிலையில், மலைமீது ஏற்றப்படும் மகாதீபத்தின் கொப்பாரை இன்று கோயில் ஊழியர்களால் மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கான 3,500 கிலோ நெய் உள்ளிட்ட பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாளை அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் எதிரில் பரணி தீபம் ஏற்றப்படும். அதையடுத்து மாலை 6 மணிக்கு மலைமீது மகா தீபம் ஏற்றப்படும்.
இந்த நிலையில், திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் கூடாமலிருக்க நகருக்குள் வரும் வழியில் 15 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களும் கோவிலில் குவிந்து விடாமலிருக்க பலத்த பாதுகாப்பும், கண்காணிப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. – ஷாலினி