அண்ணமலையை முன்வைத்து அரசியல் காய் நகர்த்தல்களா ?

 

அண்ணமலையை முன்வைத்து அரசியல் காய் நகர்த்தல்களா ?

டுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்வைத்து, பல திட்டங்களை தீட்டி வருகின்றன தமிழக அரசியல் கட்சிகள். இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்போல இல்லாமல், இந்த முறை அணி சேர்க்கை வித்தியாசமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.


குறிப்பாக திமுக, அதிமுக என இரு பிரிவாக களம் காணும் கட்சிகளிடம், இதுநாள்வரை முதல்வர் வேட்பாளர் யார் குழப்பம் இருந்ததில்லை.
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு, கருணாநிதி இருந்தவரை அவர்தான் முதலமைச்சர் என்பது வெளிப்படையாகத் தெரியும். அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு ஜெயலலிதா இருந்தவரை அவர்தான் முதலமைச்சர் என்கிற தெளிவு இருந்தது. அதனால், யாரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து களம் காண்பது என்கிற குழப்பங்களை தமிழகம் கண்டதில்லை.


தற்போது புதிதாக, முதலமைச்சர் யார் என்கிற கேள்வியை முன்வைத்து தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதால், வரும் தேர்தல் சூழலை வேறொரு கோணத்தில் பார்க்க வைப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இப்போதும், திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இருக்காது. திமுக வெற்றி பெற்றால் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் என்பது தெளிவான விஷயம். இந்த விஷயத்தில் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்துக்கு சற்றேறக்குறைய முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


எடப்பாடி பழனிச்சாமி எளிமையானவர், விவசாயி, மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் என்கிற பிம்பம் உருவாக்கப்பட்டு, அந்த பிம்பத்தை வைத்து கட்சியை, ஆட்சியை தக்க வைப்பது என்கிற திட்டம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனவே அதிமுகவிலும் குழப்பம் முடிவுக்கு வந்தது என்றே சொல்ல வேண்டும்.

அண்ணமலையை முன்வைத்து அரசியல் காய் நகர்த்தல்களா ?

முதலமைச்சர் வேட்பாளர் திட்டமிட்டதா ?

முதலமைச்சர் வேட்பாளர் என்கிற விஷயத்தை கையில் எடுத்து மறைமுக வேலைகளை செய்து வருவது பாஜகதான் என அரசியலை கவனிப்பவர்கள் தெளிவுபடுத்துகின்றனர். அடுத்த ஆண்டு தேர்தலை முன்வைத்து தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என பாஜக தீவிரமாக வேலை செய்து வருகிறது.
அதற்காகவே முதலமைச்சர் வேட்பாளர் என்கிற ஒரு பிம்பத்தை கட்டமைக்கும் வேலைகளை அந்த கட்சி தொடங்கியுள்ளது. இதுவரை நேரடியாக அறிவிக்கவில்லை என்றாலும், அதற்கு அடித்தள வேலைகளை அந்த கட்சி செய்து வருகிறது. அதற்கான ஒரு அஸ்திரம் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை.

அண்ணாமலைக்கு செல்வாக்கு இருக்கிறதா ?

அண்ணாமலைக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என கேட்பவர்களுக்கு, அந்த கட்சியினர் சொல்லும் பதில், அவர்மீது அரசியல்வாதி என்கிற அடையாளம் படியவில்லை என்பதுதான். பாஜக என்றாலே இல.கணேசன், ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் என படிந்திருக்கும் அடையாளத்தை மாற்ற வேண்டும் என்கிற காரணம்தான் எல்.முருகன் நியமனம். அவரது நியமனத்துக்கு பின்னர், பாஜகவுக்கு ஒரு சாஃப்டான தோற்றம் ஏற்பட்டுள்ளதை அரசியல் அறிந்தவர்கள் உணர்ந்து வருகின்றனர்.


அதேபோல, எந்த அரசியல் அடையாளமும், பின்புலமும் வெளிப்படையாக இல்லாத அண்ணாமலையை முன்வைத்து புதிய பிம்பத்தை உருவாக்கிவிட முடியும். அவர்மீது இதுவரையில் எந்த சாயமும் இல்லாதது பாஜகவுக்கு சாதகமான விஷயம் என அந்த கட்சி நினைக்கிறது. அதனால்தான் சேர்ந்த சில நாட்களிலேயே மாநில துணைப் பொதுச்செயலாளர் பதவியில் அமர வைத்துள்ளது.

அண்ணமலையை முன்வைத்து அரசியல் காய் நகர்த்தல்களா ?


அதையடுத்து, அவருக்கு மாவட்ட வாரியாக வரவேற்பு கூட்டங்களை ஏற்பாடு செய்து, திட்டமிட்ட வகையில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அறிமுக படலங்களை செய்து வருகிறது.
கட்சியில் இணைத்து, மாநில பொறுப்பில் அமர்த்தி, மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து…, என அத்தனை நடவடிக்கைகளுக்கும் பின்னால் இந்த முதலமைச்சர் வேட்பாளர் என்கிற நோக்கம் இருப்பதைக் கவனிக்கலாம்.

மூன்றாவது அணி உருவாகும் !

முதலமைச்சர் வேட்பாளர் அண்ணாமலை என அறிவிக்கப்படும்போது, வரும் தேர்தலில் பாஜக தலைமையில் தமிழகத்தில் மூன்றாவது அணி அமைவது உறுதியாகும். அப்படி மூன்றாவது அணி அமைகிறபோது பாஜக போடும் கூட்டணி கணக்கில் பாட்டாளி மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், ரஜினி மக்கள் மன்றம் உள்ளிட்டவை அணி சேர வாய்ப்புள்ளது. புதிய தமிழகம் ஏற்கெனவே பாஜக அணியில் இருந்து வருகிறது. இந்த கட்சிகள் எல்லாமே அண்ணாமலையை ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளவர்கள்தான். அதன் மூலம் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கி விட முடியும் என பாஜக நம்புகிறது.


பவர் சென்டராக இருக்கவே விருப்பம் என்றும், முதலமைச்சர் ஆவதில் விருப்பமில்லை எனவும் ரஜினி தெளிவுபடுத்தி விட்டார். கிட்டத்தட்ட அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்றவர் அண்ணாமலை. கூட்டணிக்குள் கமல்ஹாசன் வந்தால், அவருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு. பாமக, தேமுதிக கட்சிகளுக்கு மத்தியில் அமைச்சர் பொறுப்பு வழங்குவது, என சில கணக்குகள் பாஜக வசம் உள்ளன. இந்த விஷயத்தில் இவர்கள் யாரும் பாஜகவுடன் முரண்படுபவர்களில்லை.

அண்ணமலையை முன்வைத்து அரசியல் காய் நகர்த்தல்களா ?

அண்ணாமலை எனும் அஸ்திரம்


ஆக, அண்ணாமலை என்கிற அஸ்திரம் தமிழக அரசியலில் மூன்றாவது அணியை உருவாக்க உள்ளது என்பதே கள நிலவரமாக உள்ளது. அதே நேரத்தில் அண்ணாமலைக்கான பிம்பத்தை கட்டமைக்க வேண்டிய வேலைகளையும் பாஜக தொடங்கி விட்டது.
சமீக நாட்களாக, செய்தித்தாள்கள் தொலைக்காட்சிகள் வழியாக அண்ணாமலை முன்வைக்கும் தனது அனுபவங்கள், இளைஞர்கள் மத்தியில் அவருக்கு ஒரு பாசிட்டவான தோற்றத்தை உருவாக்குகிறது.

சமீபத்தில் இரண்டு இடங்களில், அவர் பகிர்ந்து கொண்ட தனது பணிக் கால அனுபங்கள், இளைஞர்கள் மத்தியில் அவர் ‘ஆக்டிவா’ன ஐபிஎஸ் அதிகாரி மட்டுமல்ல, எந்த சூழலையும் சமாளிக்கக்கூடியவர் என்கிற இமேஜை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோக்கள் இதுவரை லட்சக்கணக்கில் பார்க்கப்பட்டுள்ளன.


ஏற்கெனவே முதல்முறையாக வாக்களிக்கும் இளைஞர்களை, ‘முதல் ஓட்டு மோடிக்கு’ என பிரசாரம் மூலம் வளைத்த கட்சி பாஜக. அதே பிரசார உத்திகளை தமிழகத்தில் செயல்படுத்த தயாராகி வருகிறது. படித்த இளைஞர், திறமையானவர், சூழ்நிலைகளை சமாளிக்கக் கூடியவர் என்கிற அடையாளங்களை உருவாக்க பெரிய திட்டங்களுடன் உள்ளது.


இப்படியான திட்டங்களுக்கு, தமிழக பாஜக கையில் எடுக்க உள்ள முக்கியமான தேர்தல் உத்தி என்றால், திமுக, அதிமுக என திராவிட கட்சிகளை புறக்கணிக்கும் தேர்தல் என்பதாக இருக்கும். அதற்கு வலுவான மூன்றாவது அணியை உருவாக்க வேண்டும். அந்த மூன்றாவது அணிக்கு பொதுவான முகம் வேண்டும். அந்த முகம் அண்ணாமலை என்பதை இன்னும் நம்பாமல் இருப்பவர்கள் அரசியல் நகர்வுகளை கவனிக்கவில்லை அல்லது கணிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

  • நீரை.மகேந்திரன்.