அண்ணா பல்கலைக்கழகம்- சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் என்ன நடக்கும்?

 

அண்ணா பல்கலைக்கழகம்- சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் என்ன நடக்கும்?

“மத்திய அரசின் பிடியில் அண்ணா பல்கலைக்கழகம்” என்ற செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது , பெயர் மாற்றம் என தமிழக அரசின் சில அறிவிப்புகளின் பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. இந்த சூழலில் அண்ணா பல்கலைக்கழகம் மத்திய அரசின் வசம் என்கிற சர்ச்சை கல்வியாளர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

*மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து

அண்ணா பல்கலைக்கழகம்- சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் என்ன நடக்கும்?

உலக தரவரிசை பட்டியலில் இடம்பெறும் வகையில் அண்ணா பல்கலைக் கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்து 5 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு கல்வியாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர். 42 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க அண்ணா பல்கலைக்கழகம் மத்திய அரசின் வசம் சென்றால், ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

இது தொடர்பாகக் கல்வியாளர்களிடம் பேசுகையில், “ சமீபத்தில் தமிழக அரசு 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் அரசாணையை வெளியிட்டது. இந்த விவகாரத்தில் மாநில அரசின் நிதி பங்களிப்பை எதிர்பார்க்கிறது மத்திய அரசு. ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் பட்சத்தில் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீடு தொடர்ந்து பின்பற்ற முடியுமா? என்பது கேள்விக்குறியாகும். இதற்கு மத்திய அரசின் தரப்பிலிருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தமிழக அரசு அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் மௌனம் காக்கிறது.

தமிழக அரசின் இட ஒதுக்கீடு கொள்கை படி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட எவருக்கும் இட ஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பு கிடையாது. ஆனால் மத்திய அரசின் கொள்கையின்படி இதில் மாற்றம் ஏற்படும். சிறப்பு அந்தஸ்தின் படி உயர்புகழ் நிறுவனம் (Institute of Eminence -IoE) என்ற விதிகளின் படி பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கினால் கல்விக் கட்டணம் உயர்வது நிச்சயம் என்கின்றனர்.

*தன்னிச்சையாக முடிவெடுத்தாரா துணைவேந்தர் சூரப்பா ?

அண்ணா பல்கலைக்கழகம்- சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் என்ன நடக்கும்?

மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாக செயல்பாட்டையே மாற்றும் திட்டம் சிறப்பு அந்தஸ்து. இதை உடனடியாக செயல்படுத்தத் துணை வேந்தர் சூரப்பா தமிழக அரசை மீறி மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் பேசுபொருளாகி உள்ளது. அதில், அவர் குறிப்பிட்ட விஷயம், மாநில அரசு ஒன்றும் கூடுதலாக நிதி தர வேண்டியது இல்லை. அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் நிறுவனம் (IoE) என்று அறிவித்தால், மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பல்கலைக்கழகம் வசூலிக்கும் கட்டணங்கள் மூலம் பல்கலைக்கழகத்தால் தானே வருடத்திற்கு ரூபாய் 314 கோடி, ஐந்து வருடத்திற்கான ரூபாய் 1,570 கோடியைத் திரட்டிக்கொள்ள இயலும் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் துணை வேந்தர் சூரப்பா தனது பணியிலிருந்து வேறு பாதைக்குச் சென்றுள்ளது கண்கூடாகத் தெரிகிறது என கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க, ஒழுங்குபடுத்த, கலைக்க மாநில அரசிற்கே உரிமையுண்டு என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 246 சொல்கிறது. அப்படி இருக்கும் போது, தமிழக அரசை மீறி மத்திய அரசுக்கு நேரடியாகக் கடிதம் எழுதும் அதிகாரத்தைத் துணை வேந்தர் சூரப்பாவுக்கு யார் கொடுத்தது என்று அரசியல் கட்சி தலைவர்களின் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

*சரித்திரம் படைத்த அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்- சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் என்ன நடக்கும்?

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று அண்ணா பல்கலைக்கழகம். தமிழக அரசால் நிறுவப்பட்டு இயங்கிவரும் இந்த பல்கலைக்கழகம் அடித்தட்டு மக்களும் படிக்கும் சூழலை ஏற்படுத்தித் தந்தது. ஐஐடிக்கு நிகராக உருவாக்கப்பட்டுப் பல லட்ச மாணவர்களைப் பொறியாளர்களாக உருவாக்கி உள்ளது. டாக்டர் எம். அனந்தகிருஷ்ணன், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம், டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, டாக்டர் சிவன் உள்ளிட்டவர்களைப் போன்று பல்துறை ஆளுமைகளை உருவாக்கி தந்துள்ளது. தமிழகத்தில் திமுக -அதிமுக ஆட்சி மாறினாலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயல்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது. காரணம் சிறப்புமிக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் மீது கைவைத்தால் அரசியல் ரீதியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பும் என்பது தமிழக அரசியல்வாதிகளுக்கு நிச்சயம் தெரியும்.

*சிறப்பு அந்தஸ்தால் உலக புகழ் கிடைத்து விடுமா?

அண்ணா பல்கலைக்கழகம்- சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் என்ன நடக்கும்?

சிறப்பு அந்தஸ்து கிடைத்து விட்டால் மட்டும் ஒரு பல்கலைக்கழகம் உலக புகழ் பெற்றதாக மாறிவிடுமா? என்றால் நிச்சயம் இல்லை என்கின்றனர். ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கிய ஆளுமைகளும், சாதனைகளுமே பல்கலைக்கழகத்தை உயர் புகழ் நிறுவனமாக அங்கீகரிக்கும்.‌ குறிப்பிட்ட நிறுவனத்தால் இந்த அங்கீகாரத்தை தர முடியாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஐஐடி இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றவில்லை என்பது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அம்பலமானது. இதன் மூலம் 2014 -16 ஆண்டுகளில் 50ஆயிரம் ரூபாயாக இருந்த கல்விக்கட்டணம், 2 லட்சமாக உயர்ந்தது. இந்த நிலைமை தான் சிறப்பு அந்தஸ்தால் மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில் தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை. இதனால் ஏழை மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து விடவேண்டும் என்ற கனவு கனவாகவே மாறிவிடும், அறிவு, திறமை என கல்விக்குத் தேவையான அனைத்தும் இருந்தாலும் பணம் என்ற ஒற்றை வார்த்தையில் ஏழை எளிய மாணவர்கள் பின்தங்கி விடுவார்கள் என கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

*சிறப்பு அந்தஸ்து கட்டாயமா?

அண்ணா பல்கலைக்கழகம்- சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் என்ன நடக்கும்?

உலகில் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகமாக உள்ள அண்ணா பல்கலைக்கழகம் இனிமேல் தான் சிறப்பு அந்தஸ்து பெற வேண்டும் என்ற எந்த அவசியமும் கட்டாயமுமில்லை. பல சாதனையாளர்களை உருவாக்கி, சமூகத்திற்குத் தேவையான பங்களிப்பைத் தொடர்ந்து அந்த பல்கலைக்கழகம் செய்யும் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது. இப்படியான சூழலில் அண்ணா பல்கலைக்கழகத்தினை திறம்பட வழிநடத்துவது, அதற்கான நிதியை ஒதுக்குவது என்பது அதை உருவாக்கி நிர்வகித்து வரும் அரசின் கடமை என்றும், இதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசிடம் தாரை வார்க்கக்கூடாது எனவும் தமிழக மாணவர்கள், கல்வியாளர்களின் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.

-மணிக்கொடி மோகன்