கொரோனா தடுப்பு பணியில் முழு மூச்சில் இறங்கிய திமுக படை!

 

கொரோனா தடுப்பு பணியில் முழு மூச்சில் இறங்கிய திமுக படை!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Image

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., “தமிழக அரசை விமர்சனம் செய்யும் பாஜகவினர் அவர்கள் தலைவர்களை நோக்கி விமர்சனங்கள் செய்திருந்தால் நாடு காப்பாற்றப்பட்டிருக்கும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு இன்னும் கவனத்தோடும் அக்கறையோடும் செயல்பட்டு, இப்பிரச்சனையை கையாண்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இந்த அளவுக்கு இழப்புகளை சந்தித்திருக்க வேண்டாம். தமிழக அரசு மற்றும் முதல்வர் முழு மூச்சாக கொரோனா பிரச்சனையே கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா தொற்று ஒருநாளில் பரவுவதில்லை. இதுவரை மாதக்கணக்கில் கொரோனா பரவலை தடுக்க எந்த நடவடிக்கை சரியாக எடுக்கப்படாமல், முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைகளை தயாராக வைக்காத சூழலை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே கொரோனா தொற்று பிரச்சினையை எப்படி கையாளுவது என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி இன்றைக்கு அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து செய்து கொண்டிருக்கிறார் நம் முதல்வர்.

Image

அனைத்து மக்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட வேண்டும் என்று அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறது. தடுப்பூசி போடுவதற்கு மக்களுக்கு ஒரு தயக்கம் இருக்கிறது. தடுப்பூசி போடுவதற்கு மக்கள் பயப்பட வேண்டியது இல்லை. தடுப்பூசியே நமக்கு பாதுகாப்பு. தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில் 1745 கிராமங்களுக்கு நேரடியாக குழுக்கள் சென்று முகாமிட்டு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 36 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசி போட வேண்டும்.” என தெரிவித்தார்.