• March
    31
    Tuesday

Main Area

Main



மகிழ்ச்சி, வளர்ச்சி, நல்லிணக்கம் மலரட்டும்: அன்புமணி ராமதாஸ் புத்தாண்டு வாழ்த்து

anbumaniramadoss
anbumaniramadoss

சென்னை: மகிழ்ச்சி, வளர்ச்சி, நல்லிணக்கம் ஆகியவை புத்தாண்டில் மலரட்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 2019-ஆம் ஆண்டு பிறப்பை புத்தாண்டாகக் கொண்டாடும்  சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்து செல்லும் ஆண்டுகள் மகிழ்ச்சியாகவும், மறக்க முடியாதவையாகவும் அமைய வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும், எதிர்பார்ப்புமாகும். ஆனால், தமிழகத்தை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, கடந்த சில ஆண்டுகளாகவே, விடை பெறும் ஆண்டு என்பது கசப்பானதாகவே அமைந்திருக்கிறது. 2018-ஆம் ஆண்டும் இந்த இலக்கணத்திலிருந்து மாறுபட்டதாக அமையவில்லை.

2018-ஆம் ஆண்டில் அரைகுறை அதிகாரத்துடன் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது; சற்று தாமதமாகவாவது மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு பாசன மாவட்டங்களின்  பெரும்பான்மையான பகுதிகளைச் சென்றடைந்தது ஆகியவை தான் ஓரளவாவது மனநிறைவளிக்கும்  நிகழ்வுகள் ஆகும். எவ்வளவு தான் சிந்தித்துப் பார்த்தாலும் இந்தப் பட்டியலை நீட்டிக்க முடியவில்லை.

ஆனால், கசப்பான நிகழ்வுகளை பட்டியலிட வேண்டுமானால் ஆண்டின் தொடக்கத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதில் தொடங்கி, தந்தையின் குடிப்பழக்கத்தால் மனம் வெதும்பிய திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த நன்கு படிக்கக்கூடிய மாணவன் தினேஷ் நல்லசிவம் நெல்லை தொடர்வண்டிப் பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, சென்னையில் 11 வயது மாற்றுத் திறன் கொண்ட குழந்தையை 18 கயவர்கள் சீரழித்தது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 13 பேரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் மற்றும் 8 வழிச்சாலைக்காக மக்களின் விளைநிலங்களை பறிக்க அரசு துடித்தது என மக்கள் நலனுக்கு எதிராக 2018-ஆம் ஆண்டில் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.... நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக 2019-ஆம் ஆண்டு அமைய வேண்டும் என்பது தான் எனது விருப்பம். கடந்த ஆண்டின் கசப்புகள் மறைந்து மகிழ்ச்சி பெருகும் என்று நான் நம்புகிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், மகிழ்ச்சி, வளர்ச்சி, அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அமைத்தும் புத்தாண்டில் கிடைக்க வேண்டும். அனைவருக்கும் மீண்டும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.