30 ஆண்டுகளில் 3 கி.மீட்டர் நீளத்துக்கு கால்வாய் வெட்டிய விவசாயி… ஆனந்த் மகிந்திரா கொடுத்த பரிசு

 

30 ஆண்டுகளில் 3 கி.மீட்டர் நீளத்துக்கு கால்வாய் வெட்டிய விவசாயி… ஆனந்த் மகிந்திரா கொடுத்த பரிசு

பீகாரில் 30 ஆண்டுகளில் 3 கி.மீட்டர் நீளத்துக்கு தனி ஆளாக கால்வாய் வெட்டிய விவசாயிக்கு ஆனந்த் மகிந்திரா டிராக்டர் ஒன்றை பரிசாக கொடுத்து அவரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் கோதிலாவா கிராமத்தை சேர்ந்த விவசாயி லாங்கி பூயான். அவர் தனது கிராமத்தின் வறட்சியான நிலங்களுக்கு நீர்பாசன வசதியை ஏற்படுத்தும் நோக்கில், கடந்த 30 ஆண்டுகளாக தனது கிராமத்துக்கு அருகில் உள்ள வனபகுதிக்கு சென்று தனி ஆளாக 3 கி.மீட்டர் நீளத்துக்கு கால்வாய் வெட்டி நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ஆனந்த் மகிந்திரா, லாங்கி பூயானுக்கு ஒரு டிராக்டர் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.

30 ஆண்டுகளில் 3 கி.மீட்டர் நீளத்துக்கு கால்வாய் வெட்டிய விவசாயி… ஆனந்த் மகிந்திரா கொடுத்த பரிசு
ஆனந்த் மகிந்திரா

பத்திரிகையாளர் ரோஹின் குமார் என்பவர் கடந்த 18ம் தேதியன்று டிவிட்டரில் லாங்கி பூயானின் கதையை டிவிட் செய்து, ஆனந்த் மகிந்திராவுக்கு டேக் செய்தார். மேலும் லாங்கி பூயான் விரும்புவது டிராக்டர் மட்டுமே எனவும் பதிவு செய்து இருந்தார். இதனையடுத்து மகிந்திரா அந்த டிவிட்டை மறு டிவிட் செய்து, பூயானுக்கு ஒரு டிராக்டர் வழங்குவதற்கு அவர்கள் பெருமைப்படுவார்கள். எங்கள் டிராக்டரை அவர் பயன்படுத்துவது ஒரு மரியாதை என மகிந்திரா ரைஸ் கருதும் என பதிவு செய்து இருந்தார்.

30 ஆண்டுகளில் 3 கி.மீட்டர் நீளத்துக்கு கால்வாய் வெட்டிய விவசாயி… ஆனந்த் மகிந்திரா கொடுத்த பரிசு
ஆனந்த் மகிந்திரா கொடுத்த டிராக்டரில் லாங்கி பூயான்

மேலும் அந்த பகுதியில் உள்ள மகிந்திரா டீலர் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு லாங்கி பூயானுக்கு டிராக்டரை பரிசாக வழங்குமாறு தெரிவித்தார். இதனையடுத்து நேற்றுமுன்தினம் அந்த பகுதி மகிந்திரா டீலர் சித்திநாத் விஸ்வகர்மா, லாங்கி பூயானை சந்தித்து மகிந்திரா டிராக்டரை வழங்கினார். லாங்கி பூயான் இது குறித்து கூறுகையில், இதனை பெறுவேன் என்று ஒருபோதும் கனவு கண்டதில்லை. இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என தெரிவித்தார். ஆனந்த் மகிந்திரா டிவிட்டரில், தாஜ் அல்லது பிரமிடுகளை போல அவரது கால்வாய் நினைவுச்சின்னமாக இருக்கிறது என நான் நினைக்கிறேன் பாராட்டி பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.