மகாராஷ்டிராவில் 87 வயதிலும் சைக்கிளில் சென்று கிராம மக்களுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர்

 

மகாராஷ்டிராவில் 87 வயதிலும் சைக்கிளில் சென்று கிராம மக்களுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர்

கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள மகாராஷ்டிராவில், 87 வயதான ஹோமியோபதி டாக்டர் ஒருவர் தினமும் சைக்கிளில் கிராமங்களுக்கு சென்று ஏழை மக்களுக்கு வைத்தியம் பார்த்து வருவது பலரையும் வியக்க வைத்துள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பலரது வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. குறிப்பாக கிராமப்புறங்களில் மருத்துவ வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கிய சமயத்தில் சில மருத்துவமனைகளில் சாதாரண காய்ச்சல், தலைவலிக்கு கூட சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவங்கள் நடந்தன. கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்த நாளிலும் ஹோமியோபதி மருத்துவர் தினமும் கிராமங்களுக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் 87 வயதிலும் சைக்கிளில் சென்று கிராம மக்களுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர்
மருத்துவர் ராம்சந்திர தண்டேகர்

மகாராஷ்டிரா மாநிலம் சந்தரிபூரில் வசித்து வருபவர் ஹோமியோபதி மருத்துவரான ராம்சந்திர தண்டேகர். இவர் கடந்த 60 ஆண்டுகளாக தனது சைக்கிளில் தினமும் 10 முதல் 15 கி.மீட்டர் தூரம் பயணம் செய்து அருகில் உள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார். கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும் வீட்டுக்குள் இருக்காமல் 87 வயதான ராம்சந்திர தண்டேகர் வழக்கம் போல் தனது சைக்கிளில் கிராமங்களுக்கு சென்று ஏழை மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.

மகாராஷ்டிராவில் 87 வயதிலும் சைக்கிளில் சென்று கிராம மக்களுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர்
மருத்துவர் ராம்சந்திர தண்டேகர்

ஹோமியோபதி மருத்துவர் ராம்சந்திர தண்டேகர் இது தொடர்பாக கூறுகையில், கடந்த 60 ஆண்டுகளாக நான் பெரும்பாலும் தினமும் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திப்பேன். கோவிட்-19 பயம் காரணமாக, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பயப்படுகின்றனர். ஆனால் எனக்கு அது போன்ற பயம் இல்லை. என் கை கால்கள் செயல்படும் வரை எனது பணியை தொடருவேன். கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு எனது தன்னலமற்ற சேவையை தொடர விரும்புகிறேன் என தெரிவித்தார். மருத்துவர் ராம்சந்திர தண்டேகர் குறித்கு கிராமவாசி ஒருவர் கூறுகையில், அவர் எங்களுக்கு கடவுள் போன்றவர். எந்த நேரத்திலும் நாங்கள் ஒரு முறை அழைத்தால் உடனே வரும் மருத்துவர் அவர் என தெரிவித்தார். ஓய்வு எடுக்க வேண்டிய கட்டத்தில் உள்ளபோதிலும், ராம்சந்திர தண்டேகர் தொடர்ந்து சைக்கிளில் சென்று கிராம மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கி வருவதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.