தென்கொரியாவில் அமைச்சர் கீர்த்தனா! ஹூண்டாய் நிறுவன உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது குறித்து தென்கொரியா சென்று ஹூண்டாய் நிறுவனத்துடன் அமைச்சர் கீர்த்தனா ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தென்கொரியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தென் கொரியாவில் ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (HHI) நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்த தமிழக அமைச்சர் கீர்த்தனா, சந்திப்பின் போது தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்து HHI அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கப்பல் கட்டும் திட்டத்தை செயல்படுத்த HHI நிறுவனத்திற்கு உரிய வழிவகை செய்யப்படும் என்றும் அமைச்சர் கீர்த்தனா வாக்குறுதி அளித்துள்ளார்.
தென் கொரியாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான ஹூண்டாய், தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி, கடந்த டிசம்பர் 2025-ல் மதுரையில் நடைபெற்ற Tamil Nadu Investment Conclave-ல், அப்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் முன்னிலையில் இதற்கான முதற்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்து ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிகாரிகளுடன், அமைச்சர் கீர்த்தனா தற்போது ஆலோசனை நடத்தியுள்ளார்.