யார் வந்தாலும்... ஏன் விஜய்யே கூட்டணிக்கு வந்தாலும் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் - கௌதமி பேட்டி..!
தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தாலும் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என கவுதமி தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெகவை தங்கள் கூட்டணியில் சேர்ப்பதில் அதிமுக மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், தவெக தரப்பில் கூட்டணிக்குத் தலைமை, முதல்வர் பதவி, அதிக எண்ணிக்கையிலான தொகுதிகள் போன்ற நிபந்தனைகள் வைக்கப்படுவதால், முன்பு நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை என்று தகவல்கள் உள்ளன.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நடிகை கவுதமி கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது, “கரூர் துயர சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணையை வரவேற்கிறோம். அதன் மூலம் உண்மைத் தன்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் யார் முதல்-அமைச்சர் வேட்பாளராக இருப்பார்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கவுதமி, “அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கண்டிப்பாக தமிழ்நாட்டின் அடுத்த முதல்-அமைச்சராக வருவார். தமிழ்நாட்டை நல்ல திசையில் கொண்டு செல்வார்” என்றார். இதன் மூலம் த.வெ.க. கூட்டணிக்கு வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பதை அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.