விமான சாகச நிகழ்ச்சி- காமராஜர் சாலையில் வாகனங்கள் செல்ல தடை
இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினம் வருகிற 8 ஆம் தேதியன்று இந்திய விமான படையின் சார்பில் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை மெரினா கடற்கரையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
இந்த சாகச நிகழ்ச்சியை காண முக்கிய பிரமுகர்கள், மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வந்து கண்டுகளிக்க வருவதை முன்னிட்டு சென்னை காவல் துறையின் சார்பாக பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்லவும், அசாம்பவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும். அமைதியான முறையில் பொதுமக்கள் இந்த சாகச நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்கு வசதியாக சென்னை காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு பணியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், 6,500 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க லட்சக்கணக்கான மக்கள் வருகை தர இருப்பதால் அதற்கு ஏற்றார் போல் போக்குவரத்து ஏற்பாடுகளையும் சென்னை போக்குவரத்து காவல் துறை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பாஸ் உள்ள வாகனங்களை மட்டுமே அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது மேலும் திருவான்மையூரிலிருந்து பாரிசுக்கும் பாரிஸில் இருந்து திருவான்மியூருக்கும் காமராஜர் சாலை வழியாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காமராஜர் சாலை சாந்தோம் சாலை ஆர் கே சாலை வாலாஜா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் 22 வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .இந்த இடங்கள் காலை ஒன்பதரை மணி வரை மட்டுமே வாகனங்களை நிறுத்த முடியும் எனவும் அதன் பின்பு இந்த இடங்களில் வாகனத்தை நிறுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது அதற்கு ஏற்றார் போல் பொதுமக்கள் திட்டமிட்டு முன்கூட்டியே இந்த வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை நோக்கி வரும் இந்த முக்கிய சாலைகளில் வணிக வாகனங்கள் காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.